Friday, December 1, 2017

ரேடியோ சாயி தமிழ் ஒலிபரப்பு


ரேடியோ சாயி தமிழ் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் மாலை 7:30 மணிமுதல் ஒரு மணிநேரம் ஒலிபரப்பப்படுகின்றன. அதை வலையிலும் கேட்கலாம், தரவிரக்கியும் கேட்கலாம்.

* சாயி அன்பர்களுடன் நேர்காணல்
* வாஹினி நூல் ஒலி வடிவம்
* தெய்வத்தின் அருளுரை

என்பதுபோலக் கேட்கத் தெவிட்டாத பலவகை அம்சங்கள் ஒலிபரப்பாகின்றன.

இங்கு சென்று கேளுங்கள்:
http://radiosai.org/program/Index.php

Monday, January 23, 2017

பாதாரவிந்த பதிகம்-10



பத்தியால் மதுரன் சொன்ன
  பாதா ரவிந்த பதிகம்
நித்தமும் ஓதி னோர்க்கு
  நிலமீது நீடு வாழ்வு,
உத்தமச் செல்வம் மற்றும்
  ஒப்பரு முத்திய ருள்வன்
சத்திய சாயி தேவன்
  சத்தியம், அஞ்ச வேண்டா!

பொருள்:
பக்திபூண்ட மதுரபாரதியைக் கருவியாகக் கொண்டு அருளப்பட்ட இந்தப் பாதாரவிந்த பதிகத்தைத் தினந்தோறும் ஓதினோருக்கு, ஸ்ரீ சத்திய சாயி பகவான் நீண்ட ஆயுள், (குற்றமற்ற வழிகளில் வந்த) சிறந்த செல்வம், இவற்றுக்கும் மேலே ஒப்பில்லாத மோட்சத்தையும் அருளுவான். இது சத்தியம். அன்பர் அஞ்சவேண்டுவதில்லை!

குறிப்பு: பதிகம் என்பது 10 பாடல்களால் ஆனது. பத்தாவது பாடல் பலன்சொல்லும் பதிகமாக (பலச்ருதி) அமையவேண்டுமென்பது. மரபு. இத்துடன் ‘பாதாரவிந்த பதிகம்’ நிறைவு பெறுகிறது.   

Thursday, January 19, 2017

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-9



வெயில்வீசு வதனம் காண்பார்
  விரிகேச மகுடம் காண்பார்
அயில்வீசும் விழியின் அழகில்
  அருள்வீச அன்பர் காண்பார்
துயில்மாயச் சொல்லும் உரையில்
  சுகபோத நிலையைக் காண்பார்
ஒயிலான பாதம் பணிவோம்
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:

சூரியஒளியைச் சிந்துகின்ற நின் முகத்தினைக் காண்போர், அப்படியே நினது விரிந்து பரந்த சிகை ஒரு மகுடம்போலக் கவிந்திருப்பதையும் காண்பார்; வேல்போலக் கூர்த்த நின் விழிகளின் அழகில் பொங்கித் ததும்பும் கருணையையும் உனது அன்பர்கள் காண்பார்கள்; அஞ்ஞானமென்னும் உறக்கத்தை விட்டு எழுப்புவதாகிய நினது அருளுரையில், முழுஞானத்தின் சுகத்தையும் அவர்கள் காண்பார்கள். பர்த்தியில் அவதரித்த ஞானகுருவே, ஒயிலாக நடைபயிலும் நினது பாதத்தை நாங்கள் பணிகிறோம்.

Wednesday, January 18, 2017

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-8



வேதங்கள் கூறு வோனும், 
  விண்ணோர்கள் ஏத்து வோனும்
நாதங்கள் கூறு வோனும், 
  நல்லோர்கள் கூறுவோனும்,
ஏதங்கள் மாற்று வோனும், 
  எம்மோனும் நீயே பாபா!
பாதார விந்தம் பணிவோம்,
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
மிக உயர்ந்தனவாகிய நான்மறைகள் நின்னையே குறித்து நிற்கின்றன; வானவர்கள் உன்னப் போற்றுகின்றனர்; இசைப்பாடல்கள் உன் புகழையே இசைக்கின்றன; நல்லோர் உன் புகழைப் பேசுவதில் மகிழ்கின்றனர்; எங்கள் குற்றங்களைக் களைந்து எம்மை நீ மாற்றியமைத்துவிடுகிறாய்; உன்னையே நம்பும் எமக்கெல்லாம் ஒரே துணை நீதான் பாபா! பர்த்தியில் அவதரித்த ஞானகுருவாகிய உன் பாதத் தாமரைகளை நாங்கள் பணிகிறோம். 

Monday, January 16, 2017

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-7



ஓதா மறைகள் நவிலும் 
  ஒளிரா தொளிர்ந்த ஒளியே
சேதார மென்ப தில்லா
  செம்மைத்த முழுமை யுருவே
காதார நாமம் பாட
  களிப்பூறும் களியின் கருவே
பாதார விந்தம் பணிவோம்
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
எழுதிக் கற்கப்படாதவையான மறைகள், கண்ணாற் காணும் ஒளிக்கு அப்பாற்பட்ட நினது ஒளியைப் பேசுகின்றன. உனக்குச் சிதைவில்லை. நின்னுருவே செம்மையிலும் செம்மையான முழுமை. உனது நாமத்தைப் பாடிக் காதாரக் கேட்பின் உள்ளத்தில் ஊறும் களிப்பின் பிறப்பிடமானவனே, பர்த்தீசனான எமது ஞானகுருவே, உனது பாத கமலங்களைப் பணிந்தோம்.  

Sunday, January 15, 2017

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-6



மனிதர்போல் உடலெ டுத்து
  மனிதர்போல் உடையு டுத்து
மனிதர்போல் வார்த்தை சொல்லி
  மனிதர்போல் வாழு கின்றாய்!
புனிதர்கள் நின்னை யறிவார்
  பொறையிலார் அறிவ துண்டோ!
இனியநற் பாதம் பணிவோம்,
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
சாதாரண மானுடவுடலைத் தாங்கி வந்து, எங்களைப் போலவே ஆடையணிந்து, எங்களோடு உரையாடி, (மேலோட்டமாகப் பார்த்தால்) எம்போலவே வாழ்கிறாய்! புண்ணியம் செய்தோர் (புவிக்கு இறங்கிவந்த மெய்ப்பொருளே நீ என்கிற) நின் மெய்த்தன்மையை அறிவர். அதனை அறியுமளவுக்குப் பொறுமை இல்லாதவர்கள் இவ்வுண்மையை அறியவும் கூடுமோ! இனிமையே வடிவெடுத்த நின் பாதங்களைப் பணிகிறோம், பர்த்தியில் வந்து பிறந்த எமது ஞானகுருவே!