Thursday, June 18, 2020

தினம் ஒரு சாயி வெண்பா: விநாயகர் காப்புச் செய்யுள்


பெற்றோர் பெருமை பெரிதிவ் வுலகிலெனச்
சுற்றிவந்து காண்பித்த தூயவனே - அற்புதமாய்
வெண்பாவிற் சாயி விரிபுகழை நான்கூற
கண்பார்க்க வேண்டும் கனிந்து.

இந்த உலகினைவிடப் பெற்றோர் மிகப்பெருமை உடையோர் என்பதை அவர்களைச் சுற்றி வலம்வந்து நிரூபித்த தூயவனான விநாயகனே! பகவான் ஸ்ரீ சத்திய சாயியின் எல்லையற்று விரிந்த புகழைத் தினமும் ஒரு வெண்பா வழியே நான் சாற்றிட நீ கனிவோடு கடைக்கணிக்க வேண்டுமையா!

Tuesday, May 5, 2020

ஈஸ்வரம்மா தவப்புதல்வன்!

ஓம் ஸ்ரீ சாயிராம்



அவர் பெற்றார் இவர் பெற்றார்
  அவையெல்லாம் குழந்தைகளே!
இவள்பெற்றாள் ஈஸ்வரம்மா
  எனும்பெயரைக் கொண்டபெருந்
தவள்பெற்றாள் தான்பெற்றாள்
  தரணியெலாம் உய்ந்திடவே
சிவம்பெற்றாள் சக்தியினைச்
  சேர்த்தன்றோ பெற்றுவிட்டாள்!

நோயுற்றார் பிணிதீர்ந்தார்
  நோற்பாரோ தவம்தீர்ந்தார்
போயுற்றார் புட்டபர்த்திப்
  பொன்னகரை, ஈஸ்வரம்மா
தாயுற்ற தவப்புதல்வன்
  தன்னிகரில் லாத்தலைவன்
சாயீசன் சன்னிதியில்
  சன்மமிலா வாழ்வுற்றாரே!

நீலவொளிச் சிறுபந்தாய்
  நிமலமகள் கருப்புகுந்தான்
ஆலமதை அருந்தியவன்
  அவள்மடியில் அமுதருந்த!
சீலமிகும் ஈஸ்வரம்மா
  செய்ததவம் எவர்செய்தார்
பாலகனாய்ப் பரமனையே
  பரிவுடனே வளர்த்தெடுக்க!

நாமகிரி நல்வயிற்றில்
 “நாதனவன் வருவன்”என
ஆமந்த அவதூதர்
  அறிவித்த காரணத்தால்
“நாமமினி ஈஸ்வரம்மா!”
  நவின்றாராம் கொண்டமரும்;
பூமகளின் புகழ்மகனே
  போற்றுகநின் திருநாமம்!

போற்றுகநின் பூம்பாதம்
  போற்றுகநின் பெருங்கருணை
போற்றுகநின் ஞானமொழி
  போற்றுநின் பொற்கரங்கள்
போற்றுகநின் மெய்யருளால்
  பொலிவுற்ற வேதவழி
போற்றுகவே ஈஸ்வரம்மா
  பொற்கருவில் வந்தஇறை!

மதுரபாரதி
06-05-202

Friday, April 24, 2020

ஆராதனா பஞ்சகம்


ஆரமுதே அருட்புனலே அன்பர் தாழும்
பேரழகுப் பெட்டகமே பேணிக் காக்கும்
கார்முகிலே கண்மணியே கங்கை போல
வார்கருணை மாதவனே சாயித் தேவே!

நடந்தாலும் நடனம்போல் நடப்பாய் நன்கு
சுடர்ந்தாலும் சுடர்விழியால் சுடர்வாய் நன்கு
இடர்தீர்க்கும் இருகையால் அருள்வாய் நன்கு
அடர்சிகையின் அச்சுதனே அன்பின் தேவே!

கொண்டமரின் குலக்கொழுந்தே குலவை பாடும்
வண்டமரும் வண்ணமலர் சூடும் மார்பா!
எண்டிசையோர் ஏற்றமுற இன்சொல் கூறும்
பண்டிதர்க்கும் பண்டிதனே பர்த்தித் தேவே!

வீசுகிற அருட்பார்வை மின்னல் வெட்டு
கூசுகிற ஒளிநுதலோ நிலவின் தட்டு
பேசுகிற அமுதமொழி பொருநைத் தென்றல்
பூசுரரும் புவிநரரும் போற்றும் தேவே!

உன்னுடலை நீமறைத்துக் கொண்டா லென்ன
உன்னுகிற ஒருகணத்தில் உள்ளத் துள்ளே
புன்னகையும் பொன்னுடலும் கொண்டே வந்து
என்னவெனக் கேட்டிடுவாய் எந்தன் சாயீ!