Tuesday, November 29, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 6ஆமென்றால் ஆமாமாம் என்றே மும்மை
  ஆமோதித் தருளிடுவேன், இல்லை என்றே
காமங்கொள் ஆணவத்தால் கருது வோர்க்கே
  கரந்துள்ளே நிற்பதுவதும் யானே என்பாய்!
நாமத்தை வாயாலே சொல்லிப் பாடி
  நாள்தோறும் துதிப்போருக்(கு) இங்கும் அங்கும்
சேமத்தைத் தருவோனே, பர்த்தீச் சுரனே
  சீவனையே சிவனாக்கத் தோன்றிட் டாயே!

அருஞ்சொற்பொருள்: 
ஆமாமாம் -> ஆம், ஆம், ஆம் (yes, yes, yes - Swami said)
இங்கும் அங்கும் -> இம்மையிலும் மறுமையிலும்

பர்த்தீச்சுரன் பதிகம் - 5ஆண்களிடை ஆணானாய், அரிதாம் பக்தி
  அதுகொண்ட பெண்களிடை பெண்ணாய் ஆனாய்
தேன்மழலைக் குழவியிடை குழந்தை ஆனாய்
  சிவசக்தித் தத்துவமே தெய்வம் ஆனாய்!
வேணுமட்டும் விழிநிறையப் பருகி யுள்ளம்
  விம்மிடவே பேரெழிலோ டெம்முன் வந்தாய்
பூணுமருள் பொக்கிஷமே பொய்யா மொழியே
  போற்றுகிறோம் பர்த்தீசா பொற்பின் வெற்பே!

அருள்மொழி: நிரந்தர ஆனந்தத்தின் விலைஇவ்வுலகில் எதை அடையவேண்டுமானாலும் அதற்கு ஒரு விலை தரவேண்டும். ஒரு கடையில் கைக்குட்டை வாங்க விரும்பினால் அதற்கு 10 ரூபாய் கொடுக்கவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையைக் கொடுக்காமல் நீ கைக்குட்டையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. தற்காலிகமான பொருளுக்கே நீ விலை தரவேண்டும் என்றால், நிரந்தர ஆனந்தத்துக்கும் தக்க விலை தரவேண்டும் என்பது இயற்கைதானே? புனிதமானதும், என்றும் புதியதும், தெய்வீகமானதுமான அன்பே அதன் விலை. இது உலகியலான அன்பல்ல. இந்த அன்பு எப்போதும் ஒன்றிணைப்பது, மேடு பள்ளம் இல்லாதது, தேய்வும் வளர்ச்சியும் இல்லாதது. இது எப்போதும் கொடுக்கும், ஒருபோதும் வாங்காது. உலகியல் அன்புக்கும் தெய்வீக அன்புக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை எல்லோரும் உணரவேண்டும். உலகியல் அன்புக்கு வாங்கிக்கொள்ளத்தான் தெரியும், கொடுப்பதே இல்லை; ஆனால் தெய்வீக அன்போ கொடுத்துக்கொண்டே இருக்கும், வாங்கிக்கொள்வது இல்லை.

- பாபா, சாயிஸ்ருதி, கொடைக்கானல், 29/04/1997

Monday, November 28, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 3அன்பென்னும் சூரியனே அன்பின் ஊற்றே
  அன்பென்ற மணம்வீசும் தென்றல் காற்றே
அன்பர்க்கும் அல்லார்க்கும் அன்பே தந்து
  அறவழியில் சேர்க்கின்ற ஐயா! எம்போல்
வன்பாறை நெஞ்சத்தார் தமையும் அங்கோர்
  வார்த்தையிலே உருக்குகிற வாஞ்சைக் கடலே
அன்பெந்தன் வடிவென்ற பர்த்தீச் சுரனே
  அருளமுதே ஆரணனே அமுதுக் கமுதே!

பர்த்தீச்சுரன் பதிகம் - 4


அங்கியினை மேலேற்றி அங்கை கீழாய்
  அழகாகச் சுற்றியபின் அதனில் பாங்காய்ப்
பொங்கிவரும் பூதியினைத் தருவாய், தந்தே
  போக்கிடுவாய் போகாத நோய்கள் கூட!
வெங்கதிரின் ஒளியோனே! விரிந்த அண்டம்
  விதமாகச் சமைத்தோனே, வேதப் பொருளே!
சங்கரனே சக்கரனே படைப்பின் தேவே!
  சாயீசா பர்த்தீசா தருவாய் பாதம்!

அருஞ்சொற்பொருள்:
பூதி - விபூதி;
சக்கரன் - சுதர்சன சக்கரம் ஏந்திய விஷ்ணு;
படைப்பின் தேவு - பிரம்மன்

Sunday, November 27, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 2இணங்காரை நண்பரென எண்ணிக் கொண்டு
  இல்லாத செல்வத்துக் கேங்கிக் கொண்டு
நிணந்தன்னை உணவென்று நித்தம் தின்று
  நெறியில்லா நெறிநின்று நெஞ்சில் அதனை
வணங்காத சுதந்திரமென்(று) இறுமாப் புண்டு
  வாழுகிறோம்! வந்தாய்நீ எம்மைக் காக்க!
மணம்வீசும் மலர்சூழும் பர்த்தீச் சுரனே
  மலர்ப்பாதம் தரவேணும் மாந்தர்க் கரசே!

Saturday, November 26, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 1

                                                             ஓம் ஸ்ரீ சாயிராம்

வாயிருந்தும் நின்பேரைச் சொல்லவில்லை
  வணங்கவிலை கைகள்நின் வடிவம் தன்னை
மாயிருளாம் மாயையிலே மூழ்கி நாங்கள்
  மயங்குகிறோம் ஆனாலும் பர்த்தீச் சுரனே
நோயிதனை நொடியினிலே நீக்கும் உந்தன்
  நூதனமா மருந்ததனை நுகர்ந்தோ மில்லை
சாயியெனச் சந்ததமும் சொல்லற் கருள்வாய்
  சத்தியனே நித்தியனே சாந்தப் பொருளே!