விநாயகர் காப்பு
வேதநெறி நீர்த்துச் சுயநலமே வேர்விட்ட
தீதுமலி காலத்தில் வந்துதித்த - மாதவற்குப்
பண்பாய் நவமணிப் பாமாலை சாற்றிடவே
கண்பார் கணபதிநீ காத்து.
பொருள்: வேதங்கள் காட்டிய வழியை மானுடன் கடைப்பிடிப்பது குறைந்து, எங்கும் எதிலும் சுயநலமே வேரூன்றியவிட்ட இந்தக் காலத்தில் (நம்மை உய்விக்கும் பொருட்டாக) பூமியில் வந்துதித்த மாதவனாகிய ஸ்ரீ சத்திய சாயிக்கு, பண்போடு ஒரு நவமணி மாலையைக் கவிதைகளால் சாற்றுதற்கு, விநாயகப் பெருமானே, நீ நினது பார்வையினாற் காக்க வேண்டும்.
1. வைரம்
ஒளிவீசும் விழிவைரம் உவகை பொங்கக்
களிவீசும் நகைவைரம் பொதிகைக் குன்றின்
வளிவீசும் நடைவைரம் சாயீ சா, நீ
அளிவீசும் அன்பென்னும் வைரக் குன்றம்!
பொருள்:
சத்ய சாயீசா! உன் கண்கள் ஒளி வீசுகின்ற வைரங்கள்; மகிழ்ச்சி பொங்கக் களிப்பை அள்ளி வீசுகின்ற நின் சிரிப்பு வைரம்; பொதிகை மலையிலிருந்து கிளம்பி வருகின்ற தென்றலைப் போல நீ நடப்பது வைரம்; ஏன், நீயே கருணையைப் பொழிகின்ற அன்பாகிய வைரத்தாலான மலைதான்!
2. வைடூரியம்
குன்றாத குணக்குன்றம் கோடைக் கொண்டல்
மன்றாடும் சிவசக்தி மண்ணில் வந்த
பொன்றாத வைடூர்யம்! சத்ய சாயீ
கன்றாத கருணைகொள் கலியின் தெய்வம்!
பொருள்:
சத்ய சாயி பகவானே! நீ ஒருபோதும் குறைவுபடாத பண்புகளின் குன்றம்; கோடைகாலத்தில் குளிர்விக்க வந்த மழைமேகம்; சித்சபையில் சேர்ந்து ஆடுகிற சிவ-சக்தி அவதாரம்; பூமியில் வந்த மங்காத வைடூரியம்; ஒருபோதும் சினமறியாக் கருணையே வடிவான, இந்தக் கலியுகத்துக்கான தெய்வம்.
3. முத்து
தெய்வங்கள் அத்தனையும் ஒன்றாய்ச் சேர்ந்தே
உய்விக்க ஓருருவாய் வந்தே நின்ற
மெய்யுருவே மிளிர்முத்தே சத்ய சாயீ
வையகத்தில் வானகத்தைக் கொண்டு வந்தாய்!
பொருள்:
சத்ய சாயீசா! அனைத்துத் தெய்வங்களும் ஒன்று சேர்ந்து ஒரே வடிவில் எம்மை உய்விக்கும் பொருட்டாகப் புவிக்கு வந்த மெய்ஞானப் பொருளே! ஒளிர்கின்ற முத்தே; இந்த பூமிக்கே நீ சொர்க்கத்தைக் கொண்டுவந்துவிட்டாய்.
4. மரகதம்
வரமென்ன பெற்றோம்நாம் வைகுந் தத்தின்
மரகதத்து மாலவனும் மண்ணில் வந்து
கரமுயர்த்தி அபயமென! சத்ய சாயீ
அரவணையில் அறிதுயிலோய்! அன்பர்க் கன்பே!
பொருள்:
சத்ய சாயீசா! வைகுண்ட வாசனாகிய, மரகதப் பச்சை வண்ணம் கொண்ட திருமால் இந்தப் பூவுலகுக்கு வந்து, தனது கையை ‘அஞ்சேல்’ என உயர்த்துவதற்கு நாங்கள் என்ன வரம் பெற்றோமோ! ஆதிசேடன் என்னும் பாம்பணையில் அனைத்தும் அறிந்ததொரு துயிலைக் கொண்டவனே, அன்பர்களுக்கெல்லாம் அன்பாய்ப் பெருகுவோனே.
5. மாணிக்கம்
பேணித்தன் பிள்ளைபோற் காக்கும் அன்னாய்!
மாணிக்கம் போலுடையில் மகிழும் தந்தாய்!
ஆணிப்பொன் போலொளிரும் சத்ய சாயீ,
தோணியென மறுகரையிற் சேர்ப்பாய் நீயே!
பொருள்:
ஸ்ரீ சத்ய சாயீசா! நீ எம்மை அன்னைபோலப் பேணிக் காக்கிறாய். மாணிக்கம் போலச் சிவந்த உடையில் வலம்வரும் தந்தையாகவும் இருக்கிறாய். ஆணிப்பொன் போல ஒளிவீசுகிறாய். பகவானே நீ மறுமைக்கு எம்மை ஒரு தோணியைப் போலக் கொண்டு சேர்ப்பாயாக!
6. பவளம்
சேர்ப்பாய்நீ சேராத இதயம் சேரப்
பார்ப்பாய்நீ பவளநிற இதழ்ச்சி ரிப்பில்
ஈர்ப்பாய்நீ என்னிறையே சத்ய சாயீ
தேர்ப்பாகா தனஞ்சயனின் உண்மைத் தோழா!
பொருள்:
அர்ஜுனனின் தேர்ப்பாகனாக இருந்தவனே, அவனுடைய உண்மைத் தோழனும் எனது இறைவனுமான சத்ய சாயீ! சேராத (பகைபூண்ட) இதயங்களையும் ஓர் அருட்பார்வையில் ஒன்று சேர வைத்துவிடுவாய். உன்னுடைய பவளநிற இதழ்களில் உதிர்க்கும் சிரிப்பினால் ஈர்த்துவிடுவாய்.
7. பதுமராகம்
தோழனெனக் கூறிலது நீமட் டுந்தான்
வாழ்க்கையிலும் அப்பாலும் வருவாய் கூட
காழ்பதும ராகக்கல் சத்ய சாயீ
ஏழ்சுரமும் உன்புகழை இசைக்கும் அன்றே!
பொருள்:
ஒளிவீசுகின்ற பதுமராகக் கல் போன்ற சத்ய சாயீ! உண்மையான தோழன் என்று கூறப்போனால் அது நீ மட்டுமே. ஏனெனில், இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமல்லாமல், அதனைத் தாண்டியும் நீ ஒருவனே துணை வருவாய். இசையின் ஏழு சுரங்களும் உன் புகழையல்லவோ இசைக்கின்றன!
8. கோமேதகம்
ஏகாந்த மௌனத்தில் இருக்கும் போது
நீகாந்தக் குரலாலே வார்த்தை சொல்வாய்
ஆகா!கோ மேதகமாகத் தகத கப்பாய்!
மீகாமா! கலங்கரையின் விளக்கம் போல்வாய்!
பொருள்:
(சத்ய சாயீசா!) யாருமில்லாத் தனிமையில் முழு அமைதியில் ஓர் அன்பர் இருந்தால் அவரிடம் நீ உன்னுடைய காந்தம்போல வசீகரிக்கும் குரலால் பேசுவாய்! ஆகா! நீ கோமேதகக் கல்லைப் போல தகதகவென்று தோற்றமளிப்பாய். நீயே எம் வாழ்வாகிய மரக்கலத்துக்கு மாலுமியாகவும், (மாயையாகிய அந்தகாரத்தில்) அதற்குச் சரியாகத் திசைகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் இருக்கின்றாய்!
9. நீலம்
வாயுண்ட ஆலத்தால் தொண்டை நீலம்
மாயன்நீ பலநிறங்கள் காட்டிப் போனாய்
மேயநிறம் கொண்டதெலாம் சத்ய சாயீ
தூயவனே, மதுரகவி சொல்லல் ஆமோ!
பொருள்:
ஆலகால விடத்தை உண்ட காரணத்தால் உனது தொண்டை நீலமானது. ஆனால் மாயனாகிய நீ இந்த அவதாரத்தில் நீலம், பச்சை, மஞ்சள், பொன்னிறம் என்று பலவகை நிறங்களில் மிளிர்ந்ததுண்டு என்றாலும் முற்றிலும் தூயவன் நீ. அப்படியிருக்க நீ மேற்கொண்ட நிறங்களை இந்த மதுரபாரதியாகிய கவிஞன் சொல்ல வல்லவனோ?
10. பலன் குறித்த பாடல் (பலச்ருதி)
ஆமாறு வேண்டுமெனில் ஐயா நின்றன்
தேமாரி நவரத்ன மாலை நித்தம்
பூமாரி போற்சொல்ல இங்கும் அங்கும்
தாமாகத் தேடிவரும் அழியா நன்மை!
பொருள்:
எவருக்கும் ஆக்கம் காணும் உபாயம் வேண்டுமென்றால், தினந்தோறும், தேன்மழை போல இனிக்கும் இந்த நவரத்தின மாலையை, பூச்சொரிந்தது போல ஓதினால், இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் ஆகத்தக்க அழிவற்ற நன்மைகள் தாமாகவே தேடி அவருக்கு வரும்.