Showing posts with label சாயி திருப்பாவை. Show all posts
Showing posts with label சாயி திருப்பாவை. Show all posts

Monday, January 6, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 16

சாயி சொல் கேட்போம்


அன்னாய்! உனதுமகள் ஆதவன் வந்தபின்
இன்னம் உறங்குவ தென்னே! எழுப்புகிலை?
பொன்னகை சோம்பல் புறம்பேசல் பொய்நீக்கி
நன்னடத்தை பூண்டு நலமிலாக் கேளிக்கை
மின்னும் பகட்டு பொறாமை யகற்றியே
தின்னுவ இன்னவென்று தேர்ந்து நுகர்குவோம்
சொன்னமும் அன்னமும் நீரும் வழங்குவோம்
முன்னவன் சாயிசொல் கேட்டேலோ ரெம்பாவாய்!    (பாடல்-16)

(எவ்வளவு கூறியும் தமது தோழி எழுந்திராததைக் கண்டு அவளுடைய அன்னையிடம் புகார் கூறுவதாக அமைந்துள்ள பாடல் இது).

அம்மா! சூரியனே வந்துவிட்டான் இன்னும் உன் மகள் உறங்கிக் கொண்டிருப்பது எப்படி? நீதான் அவளை எழுப்பமாட்டாயா?

(இந்தப் பாவை நோன்பை நோற்கும் நாங்கள்) பொன்னாலான நகைகளை அணியமாட்டோம்; புறங்கூறுதலும் பொய் பேசுவதும் விலக்குவோம்;

நல்ல நடத்தை பூண்டு ஒழுகுவோம்;

எந்தப் பொழுதுபோக்கு நலத்தைத் தராதோ அதையும், ஆடம்பரத்தையும், பொறாமையையும் நீக்கிவிடுவோம்;

நாம் உண்ணும் பொருள் நல்லதா அல்லவா என்று ஆராய்ந்து பின்னர் உண்ணுவோம்;

தங்கமும், உணவுப்பொருளும், நீரும் தானமாக வழங்குவோம்.

ஆதிமூலமான சாயியின் அருள்மொழிக்குக் கீழ்ப்படிந்து நாங்கள் இவற்றைச் செய்கிறோம்!

Thursday, December 19, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 3

பொய் சொல்லாதே பெண்ணே!



இரவில் உறங்கிலேன் ஏழுகிலேன் என்றே
கரவுரை பேசும் கனிமொழி கேளாய்!
அரவில் துயின்றிட்ட அண்ண லவன்பால்
விரக மடைந்தார் விழிதுயில் வாரோ!
மரமரந் தோறும் மணிக்குயில் கூவும்
சுரபதி பர்த்தியில் தோன்றிய தூயோன்
நரபதி நால்சடை கங்கை சுமந்தோன்
பரமனைப் பாடிப் பணிந்தேலோ ரெம்பாவாய்!   (பாடல்-3)

பொருள்:

கனியைப் போல இனியமொழி பேசும் பெண்ணே! “இரவெல்லாம் நான் உறங்கவில்லை, அதனால் இப்போது எழுந்திருக்க முடியவில்லை” என்று பொய் பேசாதே.

ஆதிசேஷனின்மீது உறங்கும் மாலவன்பால் மையல் கொண்ட பெண்ணுக்கு எங்கேனும் தூக்கம் வருமோ! பலவித மரங்களிலும் அழகிய குயில்கள் கூவுகின்ற புட்டபர்த்தியில் தோன்றிய தூயவனும், தேவாதி தேவனும், மானுடர்க்கெல்லாம் தலைவனும், தொங்குகின்ற சடாமுடியில் கங்கையைச் சுமந்தவனுமான சிவனின் சொருபமாகவே அவதரித்த சாயி பரமனைப் பாடிப் பணிவோமாக!

(அருஞ்சொற்பொருள்: நால்சடை - தொங்குகின்ற சடை)

Monday, December 16, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 1

முன்னுரை

மார்கழி மாதம். பக்தியும் பனியும் சூழ்ந்த காலைகள் புலரும் மாதம். இந்த மாதத்தில் எல்லோரும் கோதையின் திருப்பாவையையும் மணிவாசகரின் திருவெம்பாவையையும் உள்ளமுருகப் பாடியபடிக் கண் புலருவர். அப்படியிருக்க ‘அனைத்துக் கடவுளரும் ஒன்றிணைந்ததற்கும் மேம்பட்ட’ (சர்வதேவதாதீத சொரூபி) என் சாயிநாதனைப் பாட பாவைப் பாடல்கள் இல்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டியது. அந்த ஏக்கத்தை என்னையே கருவியாகக் கொண்டு தீர்த்து வைத்தனன் எம்பெருமான் சாயி.

அவனருளாலே அவன் புகழ் பாடி, அவன் திருக்கரங்களில் சேர்ப்பிக்கும் பாக்கியம் டிசம்பர் 7, 2010 அன்று கிடைத்தது. (அதுவும் தனுர் மாதமே). அவன் திருவுள்ளம் கொள்ளும்போது இது வெளிவரட்டும் என்று காத்திருந்தேன். 2012ஆம் ஆண்டு மார்கழி மாதம் சென்னை குரோம்பேட்டை சமிதி பாவை நோன்பைக் கொண்டாடியபோது திருப்பாவை, திருவெம்பாவையோடு இதனையும் 30 நாட்களும் இசைத்தனர். அதுவும் அவன் செயலே.


இன்று மார்கழி முதல் நாள். இதை இங்கே இட்டு வைத்தால் யாரேனும் ஒரு சாயி அன்பர் கண்ணில் இது என்றேனும் படலாம். எம்பெருமான் சாயியின் திருவருளாலே இதை இசைக்க விருப்பம் வரலாம். அதையும் அவனுக்கு விட்டுவிடுகிறேன். இதனை இங்கே இடுவதற்கான விழைவை ஏற்படுத்தியவனும் அவனே.

பகவானுக்குச் சமர்ப்பித்த இந்த 30 பாவைப்பாடல்களும் இதோ இன்றிலிருந்து தினமும் ஒன்றாக பக்தர் திருக்கரங்களில்! இவற்றை திருப்பாவைப் பாடல்களின் அதே ராகங்களில் பாட முடியும். இவை ஒலிக்கோப்புகளாகவும் ஒருநாள் வெளிவர என் இதயவாசன் சாயீசன் அருவான்.

உறங்குவது சரியா, என் தோழி!

கீழ்வானில் தோன்றும் கிரணக் கதிரவனின்
ஏழு புரவிகளும் இந்நாள் எழுந்தனகாண்!
வாழு முலகெலாம் வள்ளல் பருத்தீசன்
சூழுபுகழ் பாடத் துயில்வதும் ஆகுமோ?
தோழியர் நாங்கள் துதிபாடி வந்தனம்
ஆழுவ தெங்ஙனம் அம்மா வுறக்கத்தில்!
மூழ்குவம் நன்னீர், முடிகுவம் பூங்குழல்
வாழி! வருவாய் விரைந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல் -1)

பொருள்:

கதிர்வீசிக் கிளம்பும் சூரியனின் ஏழு குதிரைகளும் கிழக்கினிலே இன்றைக்கு உதித்து வருகின்றதைக் காண்பாய். வள்ளலாகிய பர்த்தீசனின் சூழ்ந்த புகழினை இந்த உலகெல்லாம் பாடுகின்றது. அப்படியிருக்க நீ துயில்கின்றாயே, இது தகுமோ? உனது தோழியராகிய நாங்கள் அவனது துதியைப் பாடி வருகின்றோம், நீயெப்படி இவ்வாறு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறாய்! விரைந்து வா, நாம் போய் நல்ல நீரில் குளித்து தலையை முடிந்து வரலாம் வா, வாழ்க நீ தோழி.

ஓம் ஸ்ரீ சாயிராம்