Monday, December 16, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 1

முன்னுரை

மார்கழி மாதம். பக்தியும் பனியும் சூழ்ந்த காலைகள் புலரும் மாதம். இந்த மாதத்தில் எல்லோரும் கோதையின் திருப்பாவையையும் மணிவாசகரின் திருவெம்பாவையையும் உள்ளமுருகப் பாடியபடிக் கண் புலருவர். அப்படியிருக்க ‘அனைத்துக் கடவுளரும் ஒன்றிணைந்ததற்கும் மேம்பட்ட’ (சர்வதேவதாதீத சொரூபி) என் சாயிநாதனைப் பாட பாவைப் பாடல்கள் இல்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டியது. அந்த ஏக்கத்தை என்னையே கருவியாகக் கொண்டு தீர்த்து வைத்தனன் எம்பெருமான் சாயி.

அவனருளாலே அவன் புகழ் பாடி, அவன் திருக்கரங்களில் சேர்ப்பிக்கும் பாக்கியம் டிசம்பர் 7, 2010 அன்று கிடைத்தது. (அதுவும் தனுர் மாதமே). அவன் திருவுள்ளம் கொள்ளும்போது இது வெளிவரட்டும் என்று காத்திருந்தேன். 2012ஆம் ஆண்டு மார்கழி மாதம் சென்னை குரோம்பேட்டை சமிதி பாவை நோன்பைக் கொண்டாடியபோது திருப்பாவை, திருவெம்பாவையோடு இதனையும் 30 நாட்களும் இசைத்தனர். அதுவும் அவன் செயலே.


இன்று மார்கழி முதல் நாள். இதை இங்கே இட்டு வைத்தால் யாரேனும் ஒரு சாயி அன்பர் கண்ணில் இது என்றேனும் படலாம். எம்பெருமான் சாயியின் திருவருளாலே இதை இசைக்க விருப்பம் வரலாம். அதையும் அவனுக்கு விட்டுவிடுகிறேன். இதனை இங்கே இடுவதற்கான விழைவை ஏற்படுத்தியவனும் அவனே.

பகவானுக்குச் சமர்ப்பித்த இந்த 30 பாவைப்பாடல்களும் இதோ இன்றிலிருந்து தினமும் ஒன்றாக பக்தர் திருக்கரங்களில்! இவற்றை திருப்பாவைப் பாடல்களின் அதே ராகங்களில் பாட முடியும். இவை ஒலிக்கோப்புகளாகவும் ஒருநாள் வெளிவர என் இதயவாசன் சாயீசன் அருவான்.

உறங்குவது சரியா, என் தோழி!

கீழ்வானில் தோன்றும் கிரணக் கதிரவனின்
ஏழு புரவிகளும் இந்நாள் எழுந்தனகாண்!
வாழு முலகெலாம் வள்ளல் பருத்தீசன்
சூழுபுகழ் பாடத் துயில்வதும் ஆகுமோ?
தோழியர் நாங்கள் துதிபாடி வந்தனம்
ஆழுவ தெங்ஙனம் அம்மா வுறக்கத்தில்!
மூழ்குவம் நன்னீர், முடிகுவம் பூங்குழல்
வாழி! வருவாய் விரைந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல் -1)

பொருள்:

கதிர்வீசிக் கிளம்பும் சூரியனின் ஏழு குதிரைகளும் கிழக்கினிலே இன்றைக்கு உதித்து வருகின்றதைக் காண்பாய். வள்ளலாகிய பர்த்தீசனின் சூழ்ந்த புகழினை இந்த உலகெல்லாம் பாடுகின்றது. அப்படியிருக்க நீ துயில்கின்றாயே, இது தகுமோ? உனது தோழியராகிய நாங்கள் அவனது துதியைப் பாடி வருகின்றோம், நீயெப்படி இவ்வாறு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறாய்! விரைந்து வா, நாம் போய் நல்ல நீரில் குளித்து தலையை முடிந்து வரலாம் வா, வாழ்க நீ தோழி.

ஓம் ஸ்ரீ சாயிராம்

No comments:

Post a Comment