Friday, December 20, 2013

ஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 4

சாபம் நீக்கியோன் சன்னிதிக்கு வாராய்!


முன்னமோர் நாளினில் மூண்டசா பத்தினால் 
துன்னிய புற்று துயர்செய்த பர்த்தியைப்
பன்னகம் பூண்டவன் வாழ்கயி லாயமோ
மென்னகை நாரணன் மேவுவை குந்தமோ
என்னவே ஆக்கிய இன்முகன் சாயியின்
சன்னிதி தன்னைச் சடுதியில் சேர்ந்திட
உன்னை யழைத்தோம் உறங்குதல் ஆகுமோ
இன்னகை வாராய்! இசைந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-4)

பொருள்:

பண்டைநாள் ஒன்றில் உண்டான சாபத்தால் புற்றுக்கள் மண்டிக் கிடந்து புட்டபர்த்தி மிகவும் துன்பமடைந்தது. அப்படிப்பட்ட இடத்தை, இது நாகங்களை அணிந்த சிவன் வாழும் கைலாசமோ, இனிய நகை பூண்ட நாராயணன் வசிக்கும் வைகுண்டமோ என்னும்படி ஆக்கிவிட்டான் சாயி! அவனுடைய சன்னிதிக்கு விரைவாகப் போய் அடையலாம் வா என்று நாங்கள் உன்னை அழைத்தோம். இனிய நகை பூத்தவளே! இசைந்து எங்களோடு வருவாயாக.

அருஞ்சொற்பொருள்: பன்னகம் - பாம்பு.

புட்டபர்த்தியின் சாபம்:

இன்று புட்டபர்த்தி என்று அறியப்படுமிடம் பண்டைக்காலத்தில் கொல்லபள்ளி (பசுக்கூட்டம் நிறைந்த இடம்) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இங்கு முழுவதும் பசுக்களும் இடையர்களும் நிறைந்திருந்தனர்.

ஒருநாள் அந்தக் கிராமத்தின் இடையன் ஒருவன், காட்டில் பசுக்களை மேய்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான். அதில் ஒரே ஒரு பசுவின் மடியில் பால் இல்லை என்பதை கவனித்து ஆச்சரியம் அடைந்தான். இது தொடர்ந்து நடந்தது. ஒருநாள் அந்தப் பசுவைப் பின்தொடர்ந்து சென்று எப்படிப் பால் திருடுபோகிறது என்றறியத் தீர்மானித்தான். இதையறியாத பசு வழக்கம்போல ஒரு பாம்புப் புற்றின் அருகில் சென்றது. அதிலிருந்து ஒரு பாம்பு வெளிவந்து, பசுவின் பின்னங்கால்களைச் சுற்றிக்கொண்டு அதன் மடியிலிருந்த பாலைக் குடித்தது. பசுவுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை.

இடையனுக்குக் கோபம் கண்மண் தெரியாமல் பொத்துக்கொண்டு வந்தது. அந்தப் பாம்பு தெய்வீகமானதாக இருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றவில்லை. ஒரு பெரிய கல் ஒன்றை எடுத்துப் பாம்பின்மேல் எறிந்தான். ரத்தம் சிதறிக் கல்லைக் கறையாக்கியது. பாம்பும் இறந்துபோனது.

இந்தச் சம்பவத்துக்குப் பின் கொல்லபள்ளியில் இடையர் குடும்பங்களும், பசுக்களும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன. பார்க்குமிடமெல்லாம் பாம்புப் புற்றுகள் வளரத் தொடங்கின. அந்த இடையனால் கொல்லப்பட்ட பாம்பின் சாபமே கொல்லபள்ளி கிராமம் அழியக் காரணம் என்று மக்கள் நம்பினர். அந்த கிராமத்தின் பெயர் ‘புட்டவர்த்தினி’ (புற்றுக்கள் செழித்து வளரும் இடம்) என்றாயிற்று.

பாம்பின் ரத்தம் படித்த அந்தக் கல்லை எடுத்துச் சென்று அதற்கு ‘கோபாலஸ்வாமி’ என்று பெயரிட்டு அதைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். (கோபாலன் என்றால் பசுக்களைக் காப்பவன், அதாவது இடையன், என்றுதானே பொருள்). தமது குலத்தைச் சேர்ந்தவன் செய்த தவறை மன்னிக்கப் பிரார்த்தனை செய்தனர். மெல்லப் பெயர் மாறி ‘புட்டபர்த்தி’ என்று ஆனது.

அதே கிராமத்தில் ரத்னாகர வம்சத்தில் வந்த கொண்டமராஜு கிருஷ்ணனின் தேவியான சத்யபாமாவுக்கு ஒரு கோவில் ஏற்படுத்தினார். மிகுந்த பக்திமானான கொண்டமராஜுவின் பேரனாக அவதரித்த பகவானால் புட்டபர்த்தியின் சாபம் முழுவதுமாக நீங்கப்பெற்று, இன்று உலகம் போற்றும் தெய்வத் திருத்தலமாக விளங்குகிறது.