Monday, December 16, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 2

பஞ்சணையை விட்டு எழுந்து வா!



புட்டப்பர்த் தீசா பிரசாந்தி வாசாவென்(று)
இட்ட முடன்பாடி இவ்விடம் வந்தோம்காண்
பட்டுடல் பைங்கிளி பக்தி மிகுதியினால்
சட்டெனப் பஞ்சணை விட்டெழுந் தெம்முடன்
அட்டுக் கலியை அகற்ற அவதரித்த
பட்டணி அங்கியன் பர்த்தி புரீசனின்
மொட்டவிழ் பாதங்கள் தொட்டுத் தொழுதிட
ஒட்டி வருவாய் உகந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-2)

பட்டுப்போன்ற மென்மையான உடல் கொண்ட பசுங்கிளி அனைய எம் தோழியே! நாங்களெல்லாம் “புட்டப்பர்த்தீசா, பிரசாந்தி வாசா” என்று விருப்பத்துடனே பாடியபடி இங்கே வந்திருக்கிறோம்.

நீ பக்தியின் மிகுதியால் உந்தப்பட்டு சட்டென்று பஞ்சணையை விட்டு எழுந்து எம்மோடு வா.

கலியை அழித்து அகற்றுவதற்காக அவதாரம் செய்துள்ள, பட்டினால் ஆன அங்கியை அணிந்த எம் பர்த்திபுரீசனான பாபாவின் விரிந்த மலர் போன்ற பாதங்களைத் தொட்டுக் கும்பிட விரும்பி நீயும் எம்முடன் சேர்ந்து வருவாயாக!

No comments:

Post a Comment