Thursday, January 17, 2019

ஸ்ரீ சத்திய சாயி தாலாட்டு



நெஞ்சத்துத் தொட்டிலிலே நினைவென்னும் பட்டுதனை
மஞ்சமாய் விரித்து, பக்தி மணம் தெளித்து
அஞ்சுகமே, ஆரமுதே துயில்கொள்ள அழைக்கின்றோம்
பிஞ்சுக் கதிரவனே தாலேலோ!
பெரியவற்றில் பெரியவனே தாலேலோ!

அர்த்த ராத்திரியில் மத்தளமும் தம்பூரும்
சத்தம் எழுப்பிக் கூறினவாம் நின்வரவை
பர்த்தியின் வரமே பாருக்குப் பேரொளியே
உத்தமனே சத்தியமே தாலேலோ!
உன்னதனே மன்னவனே தாலேலோ!

சொர்ணமகள் ஈஸ்வரம்மா கருவில் உதித்தவனே
கர்ணம் சுப்பம்மா கைகளிலே வளர்ந்தவனே
வர்ணக் களஞ்சியமே வானவில்லே மாயவனே
தர்மத்தின் நாயகனே தாலேலோ!
தாய்க்கெல்லாம் தாயானாய் தாலேலோ!

அரங்கமா நகரிலே அறிதுயில் கொண்டதனால்
இரவிலும் பகலிலும் உழைத்தாயோ பர்த்தியிலே
புரந்தரா நிரந்தரா பொதுநடம் புரிந்தவா
வரம்பிலாக் கருணையாய் தாலேலோ
வள்ளலே கண்வளர்வாய் தாலேலோ

அன்பென்னும் வில்லிலே அன்புச் சரம்பூட்டி
அன்பெய்தாய் அவனிதனை அன்பாலே ஆட்கொண்டாய்
அன்பின் சுரங்கமே அன்பென்னும் பெருங்கடலே
அன்பருக் கன்பனே தாலேலோ!
அன்பு வடிவானவா தாலேலோ!

Thursday, January 10, 2019

மேம்போக்கான விடைகளும் அனுபவத்தின் குரலும்



ஒரு நேர்காணலின் போது சுவாமி, “கடவுள் எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். பல சகோதரர்கள் பதில் கூறினர். ஒருவர் “சுவாமி கடவுள் எனக்குள் இருக்கிறார்” என்று கூறினார். “ஓ அப்படியா? அப்படியானால் நீ ஏன் புட்டபர்த்திக்கு வருகிறாய்? எதற்காகச் சுவாமியைப் பார்க்க வருகிறாய்?” என்று சுவாமி சீண்டினார். சகோதரரால் பதில் சொல்ல முடியவில்லை. சுவாமி “பங்காரு, உன்னிடம் எண்ணம், சொல், செயல் இவற்றின் ஒருமைப்பாடு இருக்கவேண்டும். உனக்குள் சுவாமி இருக்கிறார் என்பதோடு அதை நீ உணரவும் வேண்டும். அந்த அனுபவத்துக்குப் பின்னால்தான் நீ அப்படிக் கூறமுடியும். இல்லையென்றால் அது போலி நடிப்புதான்” என்று கூறினார்.

அனுபவத்தின் குரலில்தான் நாம் பேசவேண்டும் என்பதை நாங்கள் அதிலிருந்து புரிந்துகொண்டோம். இல்லையென்றால் அது பாசாங்கு. சுவாமி கூறுவதன் உட்பொருளைப் புரிந்துகொள்ள (அந்தப் பொருளின் அனுபவமே சுவாமிதான்) அவரது போதனைகளை நாம் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். நாம், குறிப்பாக இளைஞர்கள், வெளிநோக்கிய போக்குக் கொண்டிருப்பதால், நாம் செயல்படுவதை - புறச்செயல்பாட்டை = நோக்கியே சாய்கிறோம். பகவானின் போதனைகளை மையமாகக் கொண்டு, அதையே ஆழ்ந்து சிந்தித்து, அதைச் (சிரமப்பட்டாவது) செயலில் கொண்டுவருவதுதான் சாதனைப் பாதை ஆகும். அந்தப் பாதையில்தான் சுவாமி நாம் நடக்கவேண்டும் என விரும்புகிறார்.

பகவான்! எங்கள் திசையை மாற்றியமைக்கு நன்றி. இவற்றைப் பின்பற்றுவதற்கான பலத்தை நீங்கள்தான் கொடுக்கவேண்டும். இந்தப் படிப்பினைகளைப் பின்பற்ற எங்களுக்கு ஆற்றல், அறிவு, விழிப்புணர்வு ஆகியவற்றைத் தாருங்கள். நன்றி, ஜெய் சாய்ராம்.

நன்றி: சனாதன சாரதி, டிசம்பர் 2018

சாயீஸ்வரா நீயே துணை!



பல்லவி

சாயீஸ்வரா நீயே துணை!

அனுபல்லவி

தாய் ஆயிரம் பேராயினும்
நேயா நினக் கீடாவரோ!  (சாயீஸ்வரா)

சரணங்கள்

இளமைதனில் கருவம்மிக, வழிமாறினோம் தடுமாறினோம்
அளவில்பெருங் கருணையுடன் ஐயன்வர மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

வாய் பேசினோம் வசை வீசினோம் இறைநாமமே சொலக் கூசினோம்
தேயா மதி திகழும் முகத் தெய்வம் உன்னால் மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

இன்பம் பெறும் இச்சைகளால் நற்பண்பினை விலைபேசினோம்
இன்பம் எனில் இறைவன் என அறிவூட்டினை மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

உலகம் ஒரு குடும்பம் அதில் உறையும் அனைத் துயிரும் இனி
விலகா உற வெனநெஞ்சிலே உணர்வூட்டினை மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

இதயம் ஒரு கோவில் அதில் அன்பென்பதே கடவுள் எனச்
சதமும்பொதுப் பணிசெய்திட விதிசெய்தனை மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

நாமங்களும் ரூபங்களும் நாம்செய்தவை, நம்நெஞ்சிலே
காமம்விடக் காட்சிப்படும் கடவுள் என்றாய் மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

பர்த்தீஸ்வரா பரமேஸ்வரா அகிலேஸ்வரா ஹ்ருதயேஸ்வரா
முத்தி தரும் பூர்ணேஸ்வரா உன்பாதமே சரணாகதி  (சாயீஸ்வரா)

Tuesday, January 8, 2019

ஸ்ரீ சத்ய சாயி கிளிக்கண்ணி



பர்த்தி புரீசனடி பிரசாந்தி வாசனடி
பக்தர்தம் நேசனடி - கிளியே 
பாப விநாசனடி.

சொன்ன சொல் எல்லாம் வேதம், வாய் திறந்தாலே கீதம்
பார்வையில் கிட்டும் போதம் - கிளியே 
பவவினை ஓடும் காதம்  (பர்த்தி)

அன்னமென நடந்தான் அன்பெனும் அமுதம் தந்தான்
மன்னவன் பதம் பற்றினால் - கிளியே 
மட்டிலா ஆனந்தந்தான்  (பர்த்தி)

தேடாததெல்லாம் தேடி ஆசைகள் பின்னே ஓடி
அலுத்தபின் அண்ணல் வந்தான் - கிளியே 
அமைதியைத் தந்தானடி  (பர்த்தி)

மிருககுணம் தவிர்த்து மனிதராய்ப் பரிணமித்து
வாழ வழிகாட்டினான் - கிளியே 
வணங்கிடு கை குவித்து!  (பர்த்தி)

மானவ சேவை ஒன்றே மாதவ சேவை என்றே
கோனவன் நெறி காட்டினான் - கிளியே 
கொடுப்பினை செய்தோம் நன்றே!  (பர்த்தி)

எல்லோரும் என் குடும்பம் என்றபின் ஏது துன்பம்
வல்லானின் பாதம் பற்றி - கிளியே 
வாழுதல் புவியில் இன்பம்  (பர்த்தி)

விதுரனின் கூழ்குடித்தான், பொற்சபையில் நடித்தான்
சதுரனெம் சாயிவந்தான் - கிளியே
கலியதன் கதை முடித்தான்!  (பர்த்தி)

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தமே - கிளியே 
ஐயன் பாதாரவிந்தமே!   (பர்த்தி)

Thursday, January 3, 2019

ஸ்ரீ சத்ய சாயி கும்மிப் பாட்டு


தட்டுங்கடி கையைக் கொட்டுங்கடி சத்ய
  சாயி பெயர் சொல்லித் தட்டுங்கடி
பட்டொளி அங்கி அணிந்தவன் பொன்மலர்ப்
  பாதத்தைச் சிந்தையில் கட்டுங்கடி!

வேதத்தின் உச்சியில் வீற்றிருப்பான் ஏழை
  வேடனின் கண்ணையும் ஏற்றிருப்பான்
நாதத்திலும் ஞான போதத்திலும் உள்ள
  நாதனின் பேர்சொல்லிக் கும்மியடி!

பர்த்தியெனும் சிறு பட்டியில் தோன்றியே
  பாரெங்கும் பக்தர் மனங்களிலே
நர்த்தனம் செய்திடும் ஆடலரசனின்
  நாமத்தைச் சொல்லியே கும்மியடி!

கண்ணன்சிவன் கந்தன் கணபதி கோசலை
  கர்ப்பத்தில் தோன்றிய ராமனிவன்
எண்ணரிய தெய்வம் அத்தனையும் இவன்
  என்று புகழ்ந்து கை கொட்டுங்கடி!

தங்கத்தில் கைவளை மின்னிடவும் தலை
  தாங்கிய பூச்சரம் முன்னிடவும்
அங்கம் வியர்த்து மினுங்கிடவும் ஐயன்
  அழகை வியந்து கை கொட்டுங்கடி!

சேவை செய்வோரை நயந்திடுவான் சுரம்
  சேர்த்திசை பாடிடில் காத்திடுவான்
ஓவோ இவனைப்போல் இன்னோர் தெய்வம் இனி
  உண்டோ எனப் பாடிக் கும்மியடி!

சத்தியம் தருமம் பிரேமை என இவன்
  சாந்திக்குப் பாதை அமைத்துத் தந்தான்
முத்தியும் உண்டாம் இப்பாதையில் போயிடின்
  மோகனனைப் பாடிக் கும்மியடி!

கருமம் பக்தி ஞானம் யாவுமே
  கற்றுக்கொடுத்தான் எளியருக்கும்;
கருமுகில் சிகையெனக் கொண்ட சதாசிவன்
  கருணையை எண்ணியே கும்மியடி!

அனைத்து லகிலும் அனைத்து யிர்களும்
  ஆனந்த மாகவே வாழ்கவென
நினைக்கப் பயிற்சி கொடுத்தவனின் பெரும்
  நேயத்தைப் போற்றியே கும்மியடி!

ஈசுவ ராம்பாவின் வயிறுதித்த சா
  யீசனின் சுந்தர ரூபத்தினை
மாசிலா மனதொடு எண்ணியெண்ணி
  மகிழ்ந்து சுழன்று நீ கும்மியடி!

உலகம் அன்பில் தழைத்திடவும் மக்கள்
  ஒற்றுமையில் உயர் வடைந்திடவும்
அலகிலாத் தெய்வம் அருளிடவும் வேண்டி
  ஆடியே கும்மி அடியுங்கடி!

சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம்
  சாயிராம் சாயிராம் சாயிராமா
சாயிராம் சாயிராம் சாயிராமா எனச்
  சாயிநாமம் பாடிக் கும்மியடி!