Thursday, June 27, 2019

அச்சமறு பதிகம் - 5



சாலத்துக் கஞ்சிடேன் சமரஞ்சேன்
ஞாலத்துக் கஞ்சிடேன் நாளஞ்சேன்
கோலத்துக் கொழுஞ்சிகை சாயீசன்
சீலத்துத் திருவடி சேர்ந்ததாலே

பொருள்

அழகாக அமைந்த அடர்ந்த சிகை உடையவனான சாயீசனின் சீலமிக்க திருவடிகளில் தஞ்சமடைந்துவிட்ட காரணத்தினால் நான் (ஏமாற்று வேலை செய்வோரின்) ஜாலங்களுக்கு அஞ்சமாட்டேன், போர்க்களத்துக்கும் அஞ்சமாட்டேன், உலகத்துக்கு அஞ்சமாட்டேன், (அட்டமி நவமி என்பன போன்ற) நாட்களுக்கும் அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற்பொருள்

சாலம் - ஏமாற்று வேலை;
ஞாலம் - உலகம்
கொழுஞ்சிகை - அடர்ந்த தலைமுடி 

Monday, June 24, 2019

அச்சமறு பதிகம் - 4


பனிக்கஞ்சேன் பரிதியின் சூடஞ்சேன்
சனிக்கஞ்சேன் நவகோள் தமக்கஞ்சேன்
தனிக்கஞ்ச மலர்நாட்டச்  சாயீசன்றன்
இனிக்கின்ற எழிற்பாதம் பிடித்ததாலே!

பொருள்

இணையற்ற தாமரைமலர் போன்ற பார்வை கொண்ட சாயீசனின் இனிய, அழகிய பாதங்களைப் பற்றிக்கொண்ட காரணத்தினால், பனிவிழும் குளிருக்கோ, கதிரின் வெம்மைக்கோ அஞ்சமாட்டேன். சனி உட்பட்ட நவக்கிரகங்களின் பார்வைக்கும் அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற்பொருள்

தனிக் கஞ்ச மலர் -> ஒப்பற்ற தாமரைப்பூ
நாட்டம் -> பார்வை

Friday, June 21, 2019

அச்சமறு பதிகம் - 3


கலிக்கஞ்சேன் காலனுக் கஞ்சுகிலேன்
புலிக்கஞ்சேன் பொல்லார்க்கு மஞ்சுகிலேன்
சிலிர்க்கின்ற செழுங்கேசச் சாயீசன்
பிலிற்றுந்தேன் மலர்ப்பாதம் பிடித்ததாலே!

பொருள்
சிலிர்த்து நிற்கும் செழுமையான கேசத்தைக் கொண்ட சாயீசனின் தேன் ததும்பும் மலர்போன்ற பாதங்களைப் பற்றிக்கொண்ட காரணத்தால், நான் இனி கலிபுருஷனுக்கு அஞ்சமாட்டேன், எமனுக்கும் அஞ்சமாட்டேன், புலிக்கு (அதுபோன்ற கொடிய மிருகங்களுக்கு) அஞ்சமாட்டேன், பொல்லாத மனிதர்களுக்கும் அஞ்சமாட்டேன். 

Thursday, June 20, 2019

அச்சமறு பதிகம் - 2


பார்க்கஞ்சேன் வளிதீ வானமினும்
நீர்க்கஞ்சேன் நெஞ்சநிறை ஆசைகளின்
போர்க்கஞ்சேன் புகலிடமாய்ச் சாயீசன்
சீர்க்கஞ்ச மலர்ப்பாதம் சேர்ந்ததாலே!

பொருள்
சாயீசனின் அழகிய தாமரைப் பாதங்களே தஞ்சமென அடைந்துவிட்ட காரணத்தால்,  பஞ்சபூதங்களாகிய நிலம், தீ, நீர், காற்று, வானம் என்ற எவற்றுக்கும் அஞ்சமாட்டேன். மனதில் நிறைந்து போராடுகின்ற ஆசைகளுக்கும் (அவற்றை என்னால் வெற்றிகொள்ள முடியும் என்ற காரணத்தால்) அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற்பொருள்
வானமினும் -> வானம் + இ(ன்)ன்னும், வானம் மற்றும்
சீர்க்கஞ்ச மலர் -> சீர் + கஞ்ச மலர் ->அழகிய தாமரைமலர் 

Wednesday, June 19, 2019

அச்சமறு பதிகம் - 1



நோய்க்கஞ்சேன் நொடித்துப் பழிபேசும்
வாய்க்கஞ்சேன் நள்ளிரவில் நட்டமிடும்
பேய்க்கஞ்சேன் அஞ்சலென் றுரைசாயி
வாய்க்கஞ்ச மலர்கண்ட பரிசினாலே!

பொருள்
சாயீசன் தனது தாமரை வாயினைத் திறந்து “அஞ்சாதே” என்றெமக்குக் கூறிய விதத்தினால் தைரியம் கொண்டுவிட்ட நான் இனி நோய்களுக்கு அஞ்சமாட்டேன், என்னைக் குறித்து முகத்தை நொடித்தபடி பழி பேசுகிற ஊராரின் வாய்க்கும் அஞ்சமாட்டேன், நடு இரவினில் தலைவிரித்து ஆடுவதாகக் கூறப்படும் பேயே வந்தாலும் இனி அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற் பொருள்
வாய்க்கஞ்ச மலர் - வாய் + கஞ்சமலர் -> வாயாகிய தாமரைப்பூ
பரிசினாலே -> விதத்தினால், தன்மையினால்

மதுரபாரதி

Sunday, May 5, 2019

ஈசுவாராம்பா திருமகன்


                         ஈசுவராம்பா திருமகன் தன்மலர்
                              இதழ்கள் மலர்ந்து
                         பேசுவதெல்லாம் வேதம் மனதில்
                               பிணைப்பது பிரேமை
                         வீசுவன் சூரியஜோதி விண்ணோர்
                               வேந்தர்தம் வேந்தன்
                         மாசறு தெய்வதம் இவனை
                                மகிழ்வொடு தொழுவோம்!

Tuesday, April 2, 2019

சாயி - அட்சய பாத்திரம், காமதேனு, கற்பக விருட்சம்


அள்ள அள்ளக் குறையாத
  அட்சய பாத்திரம் திரௌபதிக்கு
வள்ளல் காம தேனுவெனும்
  மந்திரப் பசுவாம் வசிஷ்டனுக்கு
கிள்ளப் பலவகைக் கனிதந்த
  கற்பக மரமோ பர்த்தியிலே
உள்ளத் துள்ளே என்சாயி
  அட்சயம், கற்பகம், காமதேனு!