Tuesday, June 25, 2013

“யாருக்கு அட்மிஷன், சுவாமிக்கா, உனக்கா?”

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா கூறினால் அதற்கேற்பச் சூழல் மாறுமேயன்றி, அவருடைய சொல்லுக்கு மறுசொல் கிடையாது. பகவானின் அருளைப் பரிபூரணமாக அனுபவித்தவரும், பர்த்தியில் பஜனைப் பாடகரும், உலகெங்கும் சென்று சாயி லீலைகளைப் பேசி மகிழ்ந்தவரும், ஆப்பிரிக்க-இந்தியரும், மருத்துவருமான அமரர் டாக்டர். D.J. காடியா அவர்கள் எழுதிய Sai Smaran நூலிலிருந்து ஒரு சம்பவம், தமிழில்:

என்னுடைய தந்தையார் எனக்கு பாம்பேயிலிருந்து லண்டன் போவதற்கு ஆலிடாலியா ஏர்லைன்ஸ் மூலம் புதன்கிழமை புறப்படும்படியான ஒருவழி விமான டிக்கட்டை அனுப்பிவைத்தார். ஆனால் சுவாமி எனக்குக் கூறிய நாளோ வியாழக்கிழமையாக இருந்தது!

நான் ஆலிடாலியா அலுவலகத்துக்கு என் சீட்டைக் கன்ஃபர்ம் செய்வதற்காகச் சென்றேன். அங்கிருந்த ஊழியர் “மன்னிக்க வேண்டும். ஒரு எந்திரக் கோளாறு காரணமாக புதன்கிழமை ஃப்ளைட் கேன்சல் ஆகிவிட்டது. நாளைக்கு, அதாவது வியாழக்கிழமை, புறப்படும் TWA விமானத்தில் நீங்கள் செல்ல ஏற்பாடாகியுள்ளது” என்றார். இப்படியாக சுவாமியின் வார்த்தையே நடந்தது. நான் வியாழனன்று லண்டனுக்குப் பறந்தேன்.

இந்த தாசன் (டாக்டர் காடியா) செப்டம்பர் 12, 1963 அன்று நேராக வெப்பமண்டல மருத்துவம் மற்றும் சுகாதாரப் பள்ளிக்கு (School of Tropical Medicine and Hygiene) சென்றேன். அங்கிருந்த செயலர், “நீ வெளிநாட்டிலிருந்து வருகிறாய். குறைந்தபட்சம் ஆறு மாதத்துக்கு முன்னால் விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று இங்கே வழிமுறை உள்ளது. நாங்கள் முன்னரே உன் அட்மிஷனை உறுதி செய்திருந்தால் மட்டுமே நீ இங்கே சேர முடியும்” என்றார்.

இதே காரணத்தினால் எனக்கு ஸ்காட்லாந்திலுள்ள கிளஸ்கோ, எடின்பர்க் ஆகிய இடங்களிலும் இடம் மறுக்கப்பட்டது. நான் மிகவும் மனமுடைந்து போனேன். அங்கிருந்த கடுங்குளிரும் எனக்குச் சாதகமாக இருக்கவில்லை. கிளாஸ்கோவில் ஒரு ஓட்டலில் நான் தங்கியிருந்தேன். தூங்கப் போகுமுன், “ஓ சுவாமி! உன் மர்மத்தை யாரே அறிவார்! ‘இங்கிலாந்து போகுமுன்னால் அங்கே எதிலாவது இடம் கிடைத்திருக்க வேண்டும்’ என்று நான் சொன்னதற்கு நீங்கள் “யாருக்கு இடம் கிடைத்திருக்க வேண்டும், சுவாமிக்கா, உனக்கா?” என்று கேட்டீர்கள். என்னாலானதை நான் செய்துவிட்டேன். இப்போது உன் உதவியை நாடி நிற்கிறேன்” என்று பிரார்த்தனை செய்தேன்.

அன்றிரவு சுவாமி என் கனவில் வந்தார்! “மகனே, ஏன் கவலைப்படுகிறாய்? லிவர்பூலுக்கு நாளை சீக்கிரமே போ. அங்கே உனக்கு ஓரிடத்தை நான் ரிசர்வ் செய்து வைத்திருக்கிறேன். உன்னை நான்தானே இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தேன். அப்படியிருக்கப் பாராமுகமாக இருப்பேனா?” என்று கேட்டார்.

எங்கே தூங்கியெழுந்தால் இடத்தின் பெயர் மறந்துவிடுமோ என்று பயந்து உடனேயே எழுந்து ‘லிவர்பூல்’ என்று எழுதிவைத்துக் கொண்டேன். சுவாமியின் அன்பர்களுடன் பேசும்போதுகூட நான் சுவாமி கனவில் வந்தால் அதன் முக்கியமான அம்சங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதுண்டு.

மறுநாள் மதியம் 4:00 மணிக்கே லிவர்பூல் ஸ்டேஷனுக்குப் போய்விட்டேன். நான் கூப்பிட்ட டாக்ஸி டிரைவர், “School of Tropical Medicine and Hygiene பக்கத்தில்தான் இருக்கிறது. ஆனால் இன்னும் அரைமணி நேரத்தில் ஆஃபீசை மூடிவிடுவார்கள். கவலைப்படாதீர்கள், நான் உங்களை அதற்குள் கொண்டு சேர்க்கிறேன்” என்றார்.

நான் படியேறிக்கொண்டு இருக்கும்போது, செயலர் ஆஃபீசை மூடிவிட்டு இறங்கப் போனார். என்னைப் பார்த்ததும் “நீங்கள் மாணவரா? அட்மிஷனுக்கு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். “யெஸ் சார்!” என்றேன் உரக்க.

அவர் கதவைத் திறந்தார். “மேலே வாருங்கள். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. இதுவரை ஒரு சீட்டும் இருக்கவில்லை. ஆனால் ஒரு விண்ணப்பதாரர் லண்டனிலேயே சேர்ந்துவிட்டார். இப்போதுதான் தந்தியில் தகவல் வந்தது. இன்னொரு விண்ணப்பதாரர் இருக்கிறார், ஆனால் அவர் இங்கே வந்து பார்க்கவில்லை. அந்த இடத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன். சரியான நேரத்தில் இங்கே நீங்கள் வந்ததற்குக் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்!” என்றார் அவர்.

“நிச்சயம் சார். என் அறைக்குத் திரும்பிப் போனதும் அதைச் செய்துவிடுகிறேன். இப்போது நான் சேர்க்கைக்கான படிவங்களை நிரப்புகிறேன்” என்று கூறினேன். அன்று இரவில் என் ஓட்டல் அறைக்குத் திரும்பியவுடன் எல்லாவற்றுக்கும் நன்றி கூறி சுவாமிக்குக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் சனாதன சாரதியில் 1964ம் ஆண்டு வெளியாயிற்று.

No comments:

Post a Comment