Wednesday, December 7, 2016

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 1


                                                   ஓம் ஸ்ரீ சாயிராம்

வேதார விந்தன் விடையன் 
 மேவிப் பிணைந்த வடிவே
ஆதார மூலப் பொருளே 
  அளவற்ற ஞானத் திருவே
ஓதா துணர்ந்த ஒளியே 
  உயர்பர்த்தி வந்த உயர்வே
பாதார விந்தம் பணிவோம் 
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற முப்பெரும் கடவுளரும் ஒன்றாகிய வடிவம் கொண்டோனே, பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆதாரமானவனே, எல்லையற்ற ஞானச்செல்வனே, கல்வி கற்பதற்கே அவசியமின்றி அனைத்துமறிந்த ஒளிபொருந்திய அறிவை உடையோனே, புட்டபர்த்தியில் அவதரித்த மேலான பொருளே, உனது பாத கமலங்களைப் பணிகிறோம், எமது ஞானகுருவாகிய பர்த்தீசனே!

குறிப்பு:
வேதாரவிந்தன் விடையன் - வேதா (பிரம்மா), அரவிந்தன் (திருமால்), விடையன் (ரிஷபம் ஏறிய சிவபெருமான்)

Tuesday, December 6, 2016

ஸ்ரீ சத்திய சாயி திருப்புகழ்

                                                 ஓம் ஸ்ரீ சாயிராம்

('நாதவிந்து கலாதீ நமோநம’ என்ற ராகத்தில் பாடவும்)

புட்ட பர்த்தி புரீசா நமோநம
 புத்தி சக்தி கொடுப்பாய் நமோநம
  புவியெ லாம்புகழ் போதா நமோநம  புவனேசா 

 புண்ய கீர்த்தன நாதா நமோநம
  புனித கொண்டமர் பேரா நமோநம
   போற்று வோர்க்கருள் பாதா நமோநம  புவிமீதில்

சிட்டர் துன்பம் துடைப்பாய் நமோநம
  சித்தி ராவதி தீரா நமோநம 
    செவ்வெழில் உடை பூண்டாய் நமோநம  பரத்வாஜா

 திங்கள் சூடிய தேவே நமோநம
   தேவ தேவியர் யாவும் ஒரேவுரு
     சேர்ந்த தெய்வமே பாபா நமோநம  பரந்தாமா

அட்ட சித்தி ப்ரதாதா நமோநம
  ஆதி சக்தி சொரூபா நமோநம
    அன்பெனுஞ் சுடர் சோதீ நமோநம  அழகேசா

 அற்பர்க்கும் அவஞ் செய்கின்ற பேருக்கும்
   அருளியே மன மாற்றங்கள் தந்திடும்
     அற்புதா, அகளங்கா நமோநம  அருளாளா

வட்டமாய்ச் சிகை வாய்ந்த வரோதயா
  வளரெழில் நகை பூண்ட நிராமயா
    வல்ல கலியை வதைப்பாய் நமோநம  வரந்தாராய்

 மற்றவர்க்கென வாழ்கின்ற த்யாகமும்
  மற்றுமோர் பிறப்பில்லாத ஞானமும்
   வரமளித்திட வேண்டும் நமோநம    சத்யசாயீ!

குறிப்பு:
புனித கொண்டமர் பேரா - புனிதரான கொண்டமராஜுவின் பேரனே! 

Saturday, December 3, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 10


                                                   ஓம் ஸ்ரீ சாயிராம்

எம்மையெம் மிடமிருந்தே காப்போன் நீயே!
  எல்லார்க்கும் எல்லாமும் ஆவோன் நீயே!
இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றம் நீயே!
  ஏழிசையில் நாதமென நின்றாய் நீயே!
செம்மைக்குள் சேர்கின்ற செய்யோன் நீயே!
  சிறுமதியைத் தீய்க்கின்ற சீரோன் நீயே!
அம்மையென அப்பனென ஆனோன் நீயே!
  ஆரறிவார் நின்புகழைச் சாயீ முற்றும்!

(பர்த்தீச்சுரன் பதிகம் முற்றும்)

பர்த்தீச்சுரன் பதிகம் - 9


                                             ஓம் ஸ்ரீ சாயிராம்

கொண்டமரின் வழிவந்தாய் ஈஸ்வ ராம்பா
  கும்பிக்குள் ஒளிப்பந்தாய் குடியே றிட்டாய்!
அண்டையிலே கர்ணத்தின் இல்லம் போந்தாய்,
   அன்னைபல ராவதெதும் புதுமை யன்றே!
வண்டமரும் தாமரையாய்ப் பாதம், கண்கள்,
  வணங்கியவர் வாழ்வுக்குப் பொறுப்பை ஏற்றுக்
கொண்டதிருக் கைகளிவை கொண்டோய் வாழி!
  கொடுப்பதுவே கொள்கையெனக் கொண்டாய் சாயீ!


குறிப்புகள்:
கொண்டமரின் வழி வந்தாய் - கொண்டமராஜு அவர்களின் பேரனாகத் தோன்றினாய்
கர்ணம் - கர்ணம் சுப்பம்மா, அண்டை வீட்டுக்காரர்

Friday, December 2, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 8



                                     
                                               ஓம் ஸ்ரீ சாயிராம்

பேசாரும் பேசிடுவர் நின்கண் நோக்கில்
  பெருநோய்கள் கொண்டாரும் பிணிநீங் கிடுவார்!
கூசாமல் பழிப்போர்க்கும் கோபம் இன்றிக்
  குறுநகையே விடையாகத் தருவாய் தேவே!
மாசான ஆணவமாம் மலத்தை நீக்கி
  மாயைதனைக் கர்மத்தை முற்றும் போக்கி
தேசான ஞானத்தைத் தருவாய் போற்றி!
  தேவர்க்கும் அரிதான சாயி போற்றி!

Thursday, December 1, 2016

ஸ்ரீகிருஷ்ணர் எங்கிருக்கிறார்?



“என்னையன்றி வேறெவரையும் தொழாமல் எவன் இருக்கிறானோ அவன் என்னோடு இருப்பான்; அவனது பாரத்தை நான் எந்நாளும் சுமப்பேன்” என்றும், “என்னையே நினைத்தபடி வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடு” என்றும் ஸ்ரீமத் பகவத்கீதை கூறுகிறது.

‘நான்’ என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறும் அவர் உனக்கு வெளியேயோ, உனக்குப் புறம்பாகவோ இருப்பவரல்ல. அது உன்னுடைய தெய்வீக மெய்நிலைதான். நீ தியானத்தின் பூரண அமைதிநிலையில், உனது புலன்கள், மனம் மற்றும் அகங்காரத்தை இழுப்பை அகற்றி உணர்வுகளைத் தடுத்த நிலையில், நீ உனக்குள்ளே அதனை இனங்காண்பாய். பகவான் தன்னைச் சாரதியாக அமர்த்திக்கொண்டுள்ள உனது இதயபீடத்தின் குளிர்ந்த அமைதியில் நீ சரண்புகுந்து கொள்ளலாம்.

- ஸ்ரீ சத்திய சாயிபாபா, பிரசாந்தி நிலையம், 23/11/1975

பர்த்தீச்சுரன் பதிகம் - 7

                             
                                                 ஓம் ஸ்ரீ சாயிராம்

யா(ன்)நீயே நீநானே என்னு முண்மை
  எமதறிவிற் கெட்டாத காரணத்தால்
வானேயும் வைகுந்தம் தன்னை நீங்கி
  வந்தாய்நீ மானுடனாய் வேடம் பூண்டு
தேனான மொழியாலே மீண்டும் மீண்டும்
  தெளிவாய்நீ சொன்னாலும் தெளியோம் நாங்கள்!
கோனே!நற் கற்பகத்தின் கொம்பே, பர்த்திக்
  கொடுஞ்சாபம் தீர்த்தோனே கொள்கைக் குன்றே!