Sunday, June 30, 2019

அச்சமறு பதிகம் - 7


வேட்கைக் கஞ்சுகிலேன் விதநூறு
பூட்கைக் கஞ்சுகிலேன் பொய்ந்நெறியர்
வாட்கைக் கஞ்சுகிலேன் சாயீசன்
தாட்கைக் கணியான தரத்தினாலே!  

பொருள்

சாயீசனின் திருவடிகளே எனது கைகளுக்கு அணியாகிவிட்ட இயல்பினாலே, நான் என்னை அணுகும் ஆசைகளுக்கு அஞ்சமாட்டேன்; (உலகில் நிலவும்) நூறுவிதமான கொள்கைகளுக்கு அஞ்சமாட்டேன்; பொய்யான நெறிகளைப் பின்பற்றுவோரின் ஆயுதம் தாங்கிய கைகளுக்கும் அஞ்சமாட்டேன்.

சிறப்புப்பொருள்

தாட்கைக்கணியான தரம் - தாள் + கைக்கு + அணியான தரம் - என் கைகளுக்கு சாயீசனின் பாதங்களே அணிகலனாக இருக்கும் நிலை, அதாவது, சாயீசன் பாதங்களையே எப்போதும் என் கைகள் பற்றியிருப்பதால் என்பது பொருள்.
பூட்கை - கொள்கை, கோட்பாடு
வாட்கை - வாள் + கை - ஆயுதம் தாங்கிய கை

Friday, June 28, 2019

அச்சமறு பதிகம் - 6


திசைக்கஞ்சேன் தீநரக யமபடர்தம்
கசைக்கஞ்சேன் கண்கவரும் வடிவேய்ந்த
தசைக்கஞ்சேன் தனிக்கருணைச் சாயீசன்
இசைக்கஞ்ச மலரடியில் இசைந்ததாலே!

பொருள்

(இணைகூற முடியாத) தனிப்பெருங் கருணையைப் பொழிகிற ஸ்ரீ சத்திய சாயியின் புகழ்பொருந்திய தாமரை மலர்போன்ற பாதங்களிற் சரணடைந்துவிட்ட காரணத்தினால், (இனி நான்) திசைகளுக்கு அஞ்சமாட்டேன்; தீ கொழுந்துவிட்டு எரிவதாகச் சொல்லப்படும் நரகத்தில், எமபடர்கள் கையில் வைத்திருக்கின்ற சவுக்குக்கு அஞ்சமாட்டேன்; அழகழகான வடிவங்களில் அமைந்த உடல்களின் ஈர்ப்புக்கும் அஞ்சமாட்டேன்.

சிறப்புப் பொருள்

திசைக்கு அஞ்சேன் - வெவ்வேறு திசைகளில் தலைவைத்துப் படுத்தல், திசை நோக்கி உண்ணுதல், சில நாட்களில் சில திசை நோக்கிப் பயணித்தல் என இவ்வாறு பலவற்றுக்கும் தடை உண்டு. ஆனால் எல்லாத் திசைகளிலும் எம் சாயியே நிறைந்திருப்பதைக் காணுவதால் எமக்குத் திசைகளால் ஏற்படும் அச்சமில்லை.

கசைக்கஞ்சேன் - சாயியிடம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்ட எமக்கு இனிப் பாவமும் புண்ணியமும் இல்லாத காரணத்தால் நரக பயமும் கிடையாது.

வடிவேய்ந்த தசை - பால் கவர்ச்சி என்பது அழகாக வடிவமைந்த உடல்களின் கவர்ச்சியே ஆகும். சாயியின்பால் ஈர்க்கப்பட்டுவிட்ட எம் மனம் இனி இனக்கவர்ச்சிக்கு ஆளாகாது.

இசைக்கஞ்ச மலர் - புகழ்பொருந்திய தாமரை மலர்

Thursday, June 27, 2019

அச்சமறு பதிகம் - 5



சாலத்துக் கஞ்சிடேன் சமரஞ்சேன்
ஞாலத்துக் கஞ்சிடேன் நாளஞ்சேன்
கோலத்துக் கொழுஞ்சிகை சாயீசன்
சீலத்துத் திருவடி சேர்ந்ததாலே

பொருள்

அழகாக அமைந்த அடர்ந்த சிகை உடையவனான சாயீசனின் சீலமிக்க திருவடிகளில் தஞ்சமடைந்துவிட்ட காரணத்தினால் நான் (ஏமாற்று வேலை செய்வோரின்) ஜாலங்களுக்கு அஞ்சமாட்டேன், போர்க்களத்துக்கும் அஞ்சமாட்டேன், உலகத்துக்கு அஞ்சமாட்டேன், (அட்டமி நவமி என்பன போன்ற) நாட்களுக்கும் அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற்பொருள்

சாலம் - ஏமாற்று வேலை;
ஞாலம் - உலகம்
கொழுஞ்சிகை - அடர்ந்த தலைமுடி 

Monday, June 24, 2019

அச்சமறு பதிகம் - 4


பனிக்கஞ்சேன் பரிதியின் சூடஞ்சேன்
சனிக்கஞ்சேன் நவகோள் தமக்கஞ்சேன்
தனிக்கஞ்ச மலர்நாட்டச்  சாயீசன்றன்
இனிக்கின்ற எழிற்பாதம் பிடித்ததாலே!

பொருள்

இணையற்ற தாமரைமலர் போன்ற பார்வை கொண்ட சாயீசனின் இனிய, அழகிய பாதங்களைப் பற்றிக்கொண்ட காரணத்தினால், பனிவிழும் குளிருக்கோ, கதிரின் வெம்மைக்கோ அஞ்சமாட்டேன். சனி உட்பட்ட நவக்கிரகங்களின் பார்வைக்கும் அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற்பொருள்

தனிக் கஞ்ச மலர் -> ஒப்பற்ற தாமரைப்பூ
நாட்டம் -> பார்வை

Friday, June 21, 2019

அச்சமறு பதிகம் - 3


கலிக்கஞ்சேன் காலனுக் கஞ்சுகிலேன்
புலிக்கஞ்சேன் பொல்லார்க்கு மஞ்சுகிலேன்
சிலிர்க்கின்ற செழுங்கேசச் சாயீசன்
பிலிற்றுந்தேன் மலர்ப்பாதம் பிடித்ததாலே!

பொருள்
சிலிர்த்து நிற்கும் செழுமையான கேசத்தைக் கொண்ட சாயீசனின் தேன் ததும்பும் மலர்போன்ற பாதங்களைப் பற்றிக்கொண்ட காரணத்தால், நான் இனி கலிபுருஷனுக்கு அஞ்சமாட்டேன், எமனுக்கும் அஞ்சமாட்டேன், புலிக்கு (அதுபோன்ற கொடிய மிருகங்களுக்கு) அஞ்சமாட்டேன், பொல்லாத மனிதர்களுக்கும் அஞ்சமாட்டேன். 

Thursday, June 20, 2019

அச்சமறு பதிகம் - 2


பார்க்கஞ்சேன் வளிதீ வானமினும்
நீர்க்கஞ்சேன் நெஞ்சநிறை ஆசைகளின்
போர்க்கஞ்சேன் புகலிடமாய்ச் சாயீசன்
சீர்க்கஞ்ச மலர்ப்பாதம் சேர்ந்ததாலே!

பொருள்
சாயீசனின் அழகிய தாமரைப் பாதங்களே தஞ்சமென அடைந்துவிட்ட காரணத்தால்,  பஞ்சபூதங்களாகிய நிலம், தீ, நீர், காற்று, வானம் என்ற எவற்றுக்கும் அஞ்சமாட்டேன். மனதில் நிறைந்து போராடுகின்ற ஆசைகளுக்கும் (அவற்றை என்னால் வெற்றிகொள்ள முடியும் என்ற காரணத்தால்) அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற்பொருள்
வானமினும் -> வானம் + இ(ன்)ன்னும், வானம் மற்றும்
சீர்க்கஞ்ச மலர் -> சீர் + கஞ்ச மலர் ->அழகிய தாமரைமலர் 

Wednesday, June 19, 2019

அச்சமறு பதிகம் - 1



நோய்க்கஞ்சேன் நொடித்துப் பழிபேசும்
வாய்க்கஞ்சேன் நள்ளிரவில் நட்டமிடும்
பேய்க்கஞ்சேன் அஞ்சலென் றுரைசாயி
வாய்க்கஞ்ச மலர்கண்ட பரிசினாலே!

பொருள்
சாயீசன் தனது தாமரை வாயினைத் திறந்து “அஞ்சாதே” என்றெமக்குக் கூறிய விதத்தினால் தைரியம் கொண்டுவிட்ட நான் இனி நோய்களுக்கு அஞ்சமாட்டேன், என்னைக் குறித்து முகத்தை நொடித்தபடி பழி பேசுகிற ஊராரின் வாய்க்கும் அஞ்சமாட்டேன், நடு இரவினில் தலைவிரித்து ஆடுவதாகக் கூறப்படும் பேயே வந்தாலும் இனி அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற் பொருள்
வாய்க்கஞ்ச மலர் - வாய் + கஞ்சமலர் -> வாயாகிய தாமரைப்பூ
பரிசினாலே -> விதத்தினால், தன்மையினால்

மதுரபாரதி