Thursday, January 3, 2019

ஸ்ரீ சத்ய சாயி கும்மிப் பாட்டு


தட்டுங்கடி கையைக் கொட்டுங்கடி சத்ய
  சாயி பெயர் சொல்லித் தட்டுங்கடி
பட்டொளி அங்கி அணிந்தவன் பொன்மலர்ப்
  பாதத்தைச் சிந்தையில் கட்டுங்கடி!

வேதத்தின் உச்சியில் வீற்றிருப்பான் ஏழை
  வேடனின் கண்ணையும் ஏற்றிருப்பான்
நாதத்திலும் ஞான போதத்திலும் உள்ள
  நாதனின் பேர்சொல்லிக் கும்மியடி!

பர்த்தியெனும் சிறு பட்டியில் தோன்றியே
  பாரெங்கும் பக்தர் மனங்களிலே
நர்த்தனம் செய்திடும் ஆடலரசனின்
  நாமத்தைச் சொல்லியே கும்மியடி!

கண்ணன்சிவன் கந்தன் கணபதி கோசலை
  கர்ப்பத்தில் தோன்றிய ராமனிவன்
எண்ணரிய தெய்வம் அத்தனையும் இவன்
  என்று புகழ்ந்து கை கொட்டுங்கடி!

தங்கத்தில் கைவளை மின்னிடவும் தலை
  தாங்கிய பூச்சரம் முன்னிடவும்
அங்கம் வியர்த்து மினுங்கிடவும் ஐயன்
  அழகை வியந்து கை கொட்டுங்கடி!

சேவை செய்வோரை நயந்திடுவான் சுரம்
  சேர்த்திசை பாடிடில் காத்திடுவான்
ஓவோ இவனைப்போல் இன்னோர் தெய்வம் இனி
  உண்டோ எனப் பாடிக் கும்மியடி!

சத்தியம் தருமம் பிரேமை என இவன்
  சாந்திக்குப் பாதை அமைத்துத் தந்தான்
முத்தியும் உண்டாம் இப்பாதையில் போயிடின்
  மோகனனைப் பாடிக் கும்மியடி!

கருமம் பக்தி ஞானம் யாவுமே
  கற்றுக்கொடுத்தான் எளியருக்கும்;
கருமுகில் சிகையெனக் கொண்ட சதாசிவன்
  கருணையை எண்ணியே கும்மியடி!

அனைத்து லகிலும் அனைத்து யிர்களும்
  ஆனந்த மாகவே வாழ்கவென
நினைக்கப் பயிற்சி கொடுத்தவனின் பெரும்
  நேயத்தைப் போற்றியே கும்மியடி!

ஈசுவ ராம்பாவின் வயிறுதித்த சா
  யீசனின் சுந்தர ரூபத்தினை
மாசிலா மனதொடு எண்ணியெண்ணி
  மகிழ்ந்து சுழன்று நீ கும்மியடி!

உலகம் அன்பில் தழைத்திடவும் மக்கள்
  ஒற்றுமையில் உயர் வடைந்திடவும்
அலகிலாத் தெய்வம் அருளிடவும் வேண்டி
  ஆடியே கும்மி அடியுங்கடி!

சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம்
  சாயிராம் சாயிராம் சாயிராமா
சாயிராம் சாயிராம் சாயிராமா எனச்
  சாயிநாமம் பாடிக் கும்மியடி!

Tuesday, October 16, 2018

சுவாமி காட்டிய வழி


நான் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவன். இந்த நகரம், மாவட்டங்கள், மக்கள் எல்லாம் நன்கு தெரியும். போதைமருந்து, குற்றம், வன்முறை, நோய்கள், வீட்டற்றவர்கள் என்பவற்றின் வருகை, இங்கே வாழ்கிறவர்களின் நல்வாழ்க்கையை மிரட்டுவதும் தெரியும். தெருவில் நடக்கும்போதும், சப்வேயில் போகும்போதும், கடைகளுக்குப் போகும்போதும், பலரின் துன்பங்களைப் பார்க்கும் கட்டாயம் ஏற்படுகிறது. சிலர் கையில் பேப்பர் கப்புகளை வைத்துக் கொண்டு பிச்சை கேட்கிறார்கள். வேறு சிலருக்கு அதற்குக்கூடத் திராணி இல்லை. அவர்கள் எல்லோருக்கும் ஏதாவது செய்யலாம். ஆனால், அவர்களுக்கு உண்மையிலேயே இருப்பது வறுமையா அல்லது சோம்பேறித்தனமா என்பது எனக்குத் தெரியவில்லை. அதை என்னால் தீர்மானிக்க முடியாத காரணத்தால், முடிந்த அளவு நான் அவர்களைப் புறக்கணித்தேன்.

அவர்களைப் பார்க்கச் சந்தோஷமாக இல்லை. சிலர் மிரட்டுகிற தோற்றம் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பணம் கொடுப்பதே இல்லையென்பதில் எனக்கு ஒரு குற்றவுணர்வு இருந்தது. ஆனால் நாராயண சேவை செய்கிறேன், குழந்தைகளுக்குச் சேவை செய்கிறேன் என்றெல்லாம் சொல்லி என்னையே நான் சமாதானப்படுத்திக் கொள்வேன். பல்வேறு கலாச்சாரப் பொக்கிஷங்களின் சிகரமான இந்த நகரத்தைப்பற்றி நான் எனக்குச் சற்று வருத்தம் இருக்கத்தான் செய்தது.

இந்த இரண்டு பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும்படி நான் சுவாமியிடம் பிரார்த்தித்தேன்: ஒன்று, தேவைப்பட்டவர்களுக்கு நான் உதவ வேண்டுமென்ற ஆவல்; இரண்டாவது, அவர்களுக்கு நான் போதுமான அளவு உதவவில்லையே என்ற ஆதங்கத்திலிருந்து விடுதலை பெறுவது.

சுவாமி எனக்கு மிக எளிய தீர்வு ஒன்றைக் கொடுத்தார். தினந்தோறும் நான் நான் சில சாண்ட்விச்சுகளைத் தயாரித்து, அவற்றையும் சில பிஸ்கட்டுகளையும் ஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக் கொள்வேன். பிறகு எனது அன்றாட வேலைக்குக் கிளம்புவேன். வீட்டற்றவர்களையும் பிச்சைக்காரர்களையும் பாராமல் செல்வதற்குப் பதிலாக, அவர்களிடம் நின்று, “ஒரு சாண்ட்விச் வேண்டுமா?” என்று கேட்பேன். “கொடுங்கள், நன்றி” என்பதாகத்தான் அவர்களின் பதில் இருக்கும். சில சமயம் புன்னகைப்பார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் நம் கண்களை அவர்களின் கண்கள் சந்திக்கும். அவர்களுக்கு சாண்ட்விச் தேவையோ இல்லையோ, தம்மை மனிதராக மதித்து, சிறிய உதவியாவது செய்யும் அந்தக் கவனிப்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு சமயம் அவர்கள் நம்மிடம் மிக இனிமையாகவும், மனதைத் தொடும் வகையிலும் நடந்து கொள்வார்கள்.

மிகப்பெரிய மாற்றம் நடந்தது எனக்குள்தான். எனது தேவை முற்றிலும் நிறைவுற்றது. இப்போதெல்லாம் நான் அவர்களைப் புறக்கணிப்பதில்லை, அவர்களுக்கு உதவவில்லையே என்ற குற்றவுணர்வு இல்லை. ‘Sai Care' மூட்டையை எடுத்துக் கொள்ளாமல் நான் வீட்டைவிட்டுக் கிளம்புவதே இல்லை. சுவாமியின் இந்த வழிகாட்டலுக்கு நான் மிகவும் நன்றியுடயவனாக இருக்கிறேன். *ஜனவரி 1990ல் ஒரு நேர்காணலில் “நான் எப்படி உதவலாம்?” என்று கேட்டதற்கு சுவாமி கூறினார், “உனது மனச்சாட்சியின்படி நட. நான் எப்போதும் உனக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கிறேன்.” அவர் வழிகாட்டினார், நான் அவ்வழியில் சென்றேன்.

அமெரிக்காவின் தேசிய சேவை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் இதை நான் ஒரு சாயி சேவைப் பணித்திட்டமாக ஏற்கப் பரிந்துரைக்கிறேன். சில சாண்ட்விச்சுகளைத் தயாரித்து, அத்துடன் பிஸ்கட்டுகளை எடுத்துச் செல்வது மிகமிக எளிது. நியூயார்க்கின் இதே பிரச்சனைகள்தாம் பல நகரங்களிலும் உள்ளது. காரில் செல்பவர்களிடம் கூடத் தட்டேந்திப் பிச்சைக்கு அணுகுகிறவர்கள் இருக்கிறார்கள். உங்களிடம் கொடுக்க ஒரு சாண்ட்விச் தயாராக இருக்கட்டும். அவர்களின் கண்களைப் பணிவோடும், நம்பிக்கையோடும் பாருங்கள், தெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். பலனை அவரிடமே விட்டுவிடுங்கள்.

ஆதாரம்: Mr. Hal Honig, New York, in Sanathana Sarathi, February 1991

Saturday, October 13, 2018

அகந்தை அழிந்தது


டாக்டர் கோல்ட்ஸ்டீனையும், லெனார்டோ கட்டர் அவர்களையும் லத்தீன் அமெரிக்காவிலுள்ள பதினோரு நாடுகளுக்கு விஜயம் செய்ய சுவாமி அனுமதித்தபோது, எல் சால்வடாரிலுள்ள பக்தர்களுக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது. அது பதினோராவது நாடு என்பதுகூட ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. நாங்கள் அதை ஒரு பொதுக்கூட்டமாக நடத்த விரும்பினோம். பகவானின் ஆசி வேண்டி ஒரு கடிதம் எழுதினோம்.

சில நாட்களுக்குப் பிறகு, இந்தப் பொதுக்கூட்டம் பற்றி அறிந்திராத இரண்டு புதிய பக்தர்கள், சுவாமிக்காகத் தாங்கள் நடனம் ஆடலாமா என்று கேட்டனர். இந்தக் கேள்வியை அடுத்துதான் “அகந்தையின் மரணம்” என்ற நடன நிகழ்ச்சி வடிவெடுத்தது. அகங்காரம், ஆத்மா, மனம், மனத்தின் நண்பன் என்ற நான்கு பாத்திரங்களாக நால்வர் நடனமாடினர். பொதுநிகழ்ச்சிக்கு இரண்டு வாரம் முன்னர்வரை எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தன. பிறகுதான் பிரச்சனை தொடங்கியது. முதலில், நடனமாடுபவர்களுக்கிடையே ஒரு பெரிய சண்டை மூண்டது. இயக்குனர் ‘நான் வெளியேறுகிறேன்’ என்றார். “சுவாமியின் முன் நீங்கள் ‘அகந்தையின் மரணம்’ என்னும் நடனத்தை அரங்கேற்ற விரும்பினால், முதலில் உங்களுடைய அகந்தையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாக வேண்டும்” என்பதை அவர்களுக்குச் சூசகமாக விளக்க வேண்டியதாயிற்று. அவர்கள் உண்மையை உணர்ந்தனர். அன்றிலிருந்து அவர்கள் மிக அழகாக ஆடினர்.

அடுத்து, கூட்டம் நடக்க இருந்த ‘நேஷனல் தியேட்டர்’ அரங்கத்தில் இருக்கும் ஏ.சி. எந்திரங்கள் வேலை செய்வதில்லை என்பது தெரிய வந்தது. அவற்றைச் சரிசெய்ய ஆகும் செலவில் இந்தியாவுக்கு இரண்டு முறை போய்வந்துவிடலாம். நிறைய மின்விசிறிகளை வைப்பதென்று தீர்மானம் ஆயிற்று. யாரால் முடியுமோ அவர்களெல்லாம் தங்கள் மின்விசிறிகளை நிகழ்ச்சிக்குத் தந்து உதவலாம் என்று அறிவித்தோம்.

நிகழ்ச்சிக்குச் சில நாட்கள் முன்னால், சுவாமியின் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் வந்தன. பக்தர்களின் உதவியோடு அவை முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டன. ‘விழுக்கல்வி' (EHV) வகுப்புகள் நடத்தப்படும் ஒரு பள்ளியில் அந்த ஆசிரியர் சுவரொட்டிகளை வைத்தார். அங்கிருந்த விஷமி ஒருவன் சுவாமியின் படத்தைச் சிதைக்கவே, அவருக்கு மிகவும் மனச்சங்கடம் ஆயிற்று. முதலில் அவர் சிதைத்தவரைத் தண்டிக்கும்படி சுவாமியிடம் வேண்டினார். பிறகு “வேண்டாம், அது சரியல்ல” என்று எண்ணினார். ஒருநாள் மதியம் பள்ளி முடிந்தபின் இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த அவர் சுவாமியின் வழிகாட்டுதலை வேண்டினார். திடீரென்று அவரது கை தானாகவே எழுதத் தொடங்கிற்று. அது அவரது வேண்டுதலுக்கு விடையாக அமைந்தது. அவர் எழுதியது இதுதான்:

“நான் உன்னிடம் அழிவதாக நினைக்கும் ஒரு படமாக வருவதில்லை. அணைக்க முடியாத ஒளியாக வருகிறேன், அழிக்க முடியாத சத்தியமாக வருகிறேன். ஒடுக்க முடியாத உன் மனச்சாட்சியின் குரலாக நான் வருகிறேன், ஏனென்றால் நான்தான் பிரபஞ்ச சத்தியத்தின் சாரம். உன் மனதிலிருக்கும் அழுக்கை நீ அகற்று. அப்போது நீ என் குரலைக் கேட்கலாம். உன் கண்ணைக் கட்டியிருக்கும் பட்டையை அகற்றினால் என்னைப் பார்க்க முடியும். நான் உன்னில் இருக்கிறேன், நான் உன் ஆத்மா, உன் சத்தியம், உன் மனச்சாட்சியின் குரல். நான் உனது தொடக்கமும் முடிவும். என்னை நீ அழிக்க முடியாது. உன்னையேதான் நீ அழித்துக் கொள்வாய்.”
 
சுவரொட்டியில் இந்த வாசகம் வைக்கப்பட்டது. மாணவர்கள் எல்லோரும் இதை வாசித்துவிட்டு அமைதியாக நகர்ந்தனர்.

பொதுநிகழ்ச்சி நாளன்று, டாக்டர் கோல்ட்ஸ்டீன் மற்றும் லெனார்டோ கட்டர் இருவரும் விமான நிலையத்தின் கௌரவ மண்டபத்தில், பஜனைப் பாடல்களுடன் வரவேற்கப்பட்டனர். பிறகு ஆறு சாயி மையங்களுக்கு விரைந்து சென்று பார்வையிட்ட பின்னர், பொதுக்கூட்டத்துக்குச் சென்றனர்.

என்ன கூட்டம்! சரியான நேரத்துக்கு வந்தவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. அரங்கத்தின் கதவு அடைக்கப்பட்டது, மற்றவர்கள் திரும்பிப் போக வேண்டியதாயிற்று. இருவரும் வழங்கிய உரையமுதம் வந்தோரின் இதயங்களில் இடம் பிடித்தன. பிறகு ‘அகந்தையின் மரணம்’ நாட்டிய நாடகத்துக்காக நடனக்காரர்கள் மேடையில் நுழைந்தனர். அவருக்கென இடப்பட்ட ஆசனத்திலிருந்தும், அங்கிருந்த ஒவ்வொருவரின் இதய ஊஞ்சலில் அமர்ந்தும் சுவாமி அதைப் பார்த்து ரசித்தார்.

உன்னிடம் அகந்தை இருந்து, அதன் காரணமாக “சுவாமி என்னுடையவர்” என்று நினைத்தால், அதில் சுவாமி சிறைப்பட்டு, உனக்கு உதவமுடியாமல் போய்விடுகிறார். “நான் சுவாமியுடையவன்” என்று நினைக்கும்போது, சுவாமி உன்னைப் பராமரித்து, உனக்கு ஆன்மீக முன்னேற்றம் தருகிறார். எல்லாமே உன் பணிவிலும், மனப்பான்மையிலும் உள்ளது. எல்லாவற்றையும் கடவுளாக ஏற்றுக்கொள். கடவுள் எங்கும், எல்லாவற்றிலும் உள்ளார். கடவுளின் சர்வ வியாபகத் தன்மையை நீ ஏற்கும்போது உன் அகந்தை அழிவுறும். அகந்தைதான் சரணாகதியைத் தடுத்து வழியில் நிற்பது.

ஆதாரம்: Sai Spiritual Showers, Vol. 1, Issue 18 Dt. 27-12-2007

Friday, October 12, 2018

ஆலிவர் கிராம்வெல்லின் இறுதிப் புரிதல்



ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்தின் ராணுவ தளபதியாக இருந்தவர். மிகவும் புத்திசாலி அரசியல்வாதியும்கூட. தனது நண்பர்களுக்காக அவர் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்தார். மக்களிடம் வோட்டு வாங்கவும் ஏராளமாகச் செலவழித்தார். அவருடைய இறுதிக்காலம் வந்தபோது அவர், “சீ! என் உடல், பொருள், காலம், ஆற்றல் அனைத்தையும் தவறாகப் பயன்படுத்தினேன். நான்மட்டும் இவற்றையெல்லாம் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்தால், எத்தனை மகிழ்ச்சியாக இருந்திருப்பேன், எத்தனை உயர்ந்த நிலையை அடைந்திருப்பேன்! அவ்வளவு பணமும் சக்தியும் செலவழித்தபின் இதுதான் என் கதி!” என்று அவர் மனம் வருந்தினார். 

மறுபிறவி என்று ஒன்று இருந்தால் நான் அரசியல்வாதி ஆகமாட்டேன் என்று அவர் உறுதி எடுத்துக்கொண்டார்.

- பாபா, 05-09-1996

Thursday, October 11, 2018

நான் இருக்கிறேன்.....


நண்பர் வீட்டுக்குப் போய்விட்டு நள்ளிரவில் திரும்பி வரும் வழி அது. சான்டா பார்பாராவின் மிஷனைத் தாண்டி மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருக்கிறேன். குறுகலான சாலை, கும்மிருட்டு, பலத்த சாரல். இடது பக்கத்தின் செங்குத்தான பாறைகள் சுவர்போல நிற்கின்றன. வலதுபுறத்தில் கிடுகிடு மலைச்சரிவும் பாயும் நீரும். வெகுவேகத்தில் கார் விரைகிறது; சற்றே வேகத்தைக் குறைத்தேன். இன்னும் வேகம்தான். ‘தற்கொலைத் திருப்பம்’ என்றழைக்கப்படும் வளைவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். சாலையில் இருந்த எண்ணெய்க் கசிவை அடித்துச் செல்லப் போதுமானதாக மழை இல்லை என்பதை கவனித்தேன்.

பிரேக்கைத் தொட்டேன், கார் சறுக்கியது. இன்னும் அழுத்தினேன், சக்கரம் சுழல்வது நின்றது, ஆனால் பிரேக்கே இல்லாதது போலக் கார் பறந்தது. என்ன நடக்கிறதென்பதை என்னால் நம்ப முடியவில்லை. தடுப்புச் சுவரைத் தாண்டிவிட்டது, நேரம் நின்றது, கார் பறந்துகொண்டுதான் இருந்தது. “இல்லை, வேண்டாம், பாபா... பாபா!” என்னுள் எல்லாம் அலறியது.

சறுக்கித் தாவிப் பறந்தபோதும் கார் உருளவில்லை. ஒரு பெரிய கிளை குறுக்கே வந்தது. தலை போயிற்று என்று நினைத்தேன். ஆனால் கார் அதன் கீழே போக, கனத்த கிளையும் இலைகளும் காரின் உச்சியில் உரசுவதைக் கேட்க முடிந்தது. அந்த இருள் குகையில் மற்றுமொரு பாய்ச்சலின் போது இன்னொரு மரம் என்னை நோக்கி வருவது தெரிகிறது. டிரைவர் பக்கம் இருந்த கதவுகளை எதுவோ தாக்கியதில் கார் சற்றே இடப்புறம் நகர்ந்து, மரத்துக்கும் பெரிய பாறைக்கும் இடையே சென்று உட்கார்ந்தது. கண்ணாடி உடைவது கேட்டபோதும், அந்தச் சில்லுகள் வெளிப்புறமாக, உட்புறமல்ல, பறந்தன! ஒன்றிரண்டு ஊசித் துணுக்குகள் முகத்தில் மட்டுமே குத்தின. முகத்தில் பாதிப்பில்லை என்பது புரிந்தது.

கார் திடீரென நின்றது, எஞ்சின் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. பெட்ரோல் டேங்க் நிரம்பியிருந்த போதிலும் நல்லவேளையாகத் தீப்பற்றி வெடிக்கவில்லை.

எஞ்சினை நிறுத்தினேன். விளக்குகள் இல்லை. நிசப்தமல்ல, இரவின் ஒலிகள் பெரிதாகக் கேட்டன. கீழே மிஷன்க்ரீக் நீரோடை. தவளை மற்றும் சுவர்க்கோழிகளின் கூக்குரல். மெதுவாகக் கைகளை, கால்களை, உடலை நகர்த்தினேன். முழுவதுமே நடுக்கம். டிரைவர்பக்கம் இருந்த கதவைத் திறக்கமுடிந்தது. காலெடுத்து வெளியில் வைத்தால் எத்தனை அடி கீழே விழுவேன் என்பதைச் சொல்ல முடியவில்லை. அல்லது காரே நிலைபெயர்ந்து உருளுமா? அதுவும் அவ்வப்போது சிறிது நடுங்கியது. உதறும் குரலில் “ஓ பாபா! பாபா! என்னால் தனியாக இதைச் சமாளிக்க முடியாது. நீ என்னை என்ன செய்யப்போகிறாய்!” என்றேன்.   

டாஷ் போர்டு கடிகாரம் நள்ளிரவுக்கு மேல் ஓரிரண்டு நிமிடம் என்றது. எந்தப் பக்கமும் வெளியேற வழியில்லை. கார் சறுக்கி வந்த சரிவு தெரியவில்லை. எந்தச் சாலையை நான் திடீரென்று விட்டகன்றேனோ அது இருக்கும் திசையும் தெரியவில்லை. அச்சுறுத்தும் விதமாகக் கார் இடதுபுறம் சரியத் தொடங்கியது. காருக்குள் என் பொருட்கள் இறைந்திருந்தன. மெல்ல என் செருப்பைத் தொட்டேன். நாகரீகத்தின் எந்தச் சுவட்டையும் என்னால் அங்கே உணரமுடியவில்லை. என் கார் தடுப்புச்சுவரைத் தாண்டிய நேரத்தில், மலைப்பாதையில் வேறு கார் எதுவும் போகவில்லை. விடியும்வரை அங்கேயேதான் என்று நினைத்தேன்.

நேரம் 12:20. மேலேயிருந்து 45 டிகிரி கோணத்தில் பளீரென்ற ஒளி என்மீது பாய்வதை உணர்ந்தேன். கவனமாக வலதுகதவுப் பக்கம் நகர்ந்தேன். ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டு, உதவி கேட்டுக் கூவினேன். பெரிய விளக்கொளிக்குப் பின்னே சில ஆண்குரல்கள் கேட்டன. நான் உயிரோடும் அடிபடாமலும் இருக்கிறேன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். தாங்கள் போலீஸ் அதிகாரிகள் என்றும், தீயணைப்புப் படை பின்னால் வருகிறதென்றும் கூறினர். ஒரு சங்கிலியைப் பிணைத்து முதலில் ஒருவர் வருவதைப் பார்த்தேன். பின்னால் மூவர். ஒரு சங்கிலிப் பெட்டியில் (வின்ச்) என்னை ஏற்றிப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசெல்ல அரைமணி பிடித்தது. நான் மீண்டும் சாலையில் நின்றபோது, காயம் இல்லாமல் பிழைத்திருப்பதை நான் உட்பட யாராலுமே நம்ப முடியவில்லை.   

“நான் எங்கிருக்கிறேன், என்னை எங்கே தேடுவதென்று எப்படித் தெரியவந்தது?” என்று என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்ற அதிகாரியிடம் கேட்டேன். “12:11க்கு எனக்குத் தகவல் வந்தது. யாரோ கூப்பிட்டார்கள்” என்றார். தகவல் கொடுத்தவருக்கு நன்றி சொல்ல நான் பெரிது விரும்பினேன். வீட்டுக்குப் போனதும் அவர் தலைமையகத்தைக் கூப்பிட்டுக் கேட்டார். “பெயர் சொல்லாத யாரோ கூப்பிட்டார்களாம்”. “ஆணா? பெண்ணா?” என்று கேட்டேன் நான். “சொல்ல முடியவில்லை.”

“இந்த நிலையில் ஏன் பெயர் சொல்லாமல் கூப்பிட வேண்டும்?” என்று கேட்டேன். “பலர் தலையிட விரும்புவதில்லை” என்றார் போனைக் கீழே வைத்துவிட்டு. அவரை வெளியே அனுப்பக் கதவருகே போகும்போது என்னுள் “நான் தலையிட்டேன்” என்ற சொற்கள் தெளிவாகக் கேட்டன.

பாபா, என் இதயத்திலிருந்து சொல்கிறேன், உனக்கு நன்றி. எந்தக் காரணத்துக்காக நீ என்னைக் காப்பாற்ற நினைத்திருந்தாலும் அதற்கு நான் நூறு சதவீதம் ஒத்துழைப்பேன்.

அதற்குப் பின்னர் பலமுறை அதே விபத்தின் அச்சத்தோடு திடுக்கிட்டு உறக்கத்திலிருந்து எழுந்ததுண்டு. அப்போதெல்லாம் “நான் தலையிட்டேன்” என்ற சொல்லை மீண்டும் கேட்டு அமைதியடைகிறேன்.

ஆதாரம்: Muriel J Engle, Santa Barbara, USA in Sanathana Sarathi, 1979.