Thursday, December 26, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 11

அல்லல்கள் இல்லை!


சில்லென்ற சித்திரைச் செந்நதி யாடியே
முல்லைச் சிரிப்பினாய் முன்செல்லு வோம்இனி
தில்லை நடனத்தன் சீரங்கன் சீரடியன்
பல்லுயிர் தோற்றிப் புரந்து கரப்பவன்
மெல்லிய மாயைத் திரையில் மறைபவன்
எல்லாம் இவனே எனநாம் சரண்புக
அல்லல்கள் இல்லை அழுத்திடும் பாரமில்லை
வல்லமை கொண்டே வழுத்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-11)

முல்லை பூத்தாற்போலச் சிரிக்கும் எம் தோழியே!

சில்லென்ற நீர் ஓடுகின்ற சித்திராவதியில் நீராடி, நாம் மேல் செல்லலாம் வா.

தில்லையில் ஆடும் சிதம்பரன், ஸ்ரீரங்கநாதன், ஷீரடிவாசன், எண்ணற்ற உயிர்களைப் படைத்துக் காத்து மறைப்பவன், நமது பார்வைக்கு அகப்படாமல் மெலிதான மாயைத் திரையின்பின் இருப்பவன், இவையெல்லாம் அவனே என்று நாம் புரிந்துகொண்டு, அவனிடம் சரண் புகுந்துவிட்டால் பிறகு நமக்குத் துன்பமில்லை.

உலக வாழ்க்கையின் பாரம் அழுத்தாது. அதனால் ஏற்பட்ட தெம்போடு அவனை வாழ்த்திப் பாடலாம் வா!

Wednesday, December 25, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 10

எங்கெல்லாம் தேடுகிறார்!

வான்பனி போர்த்த இமயக் கொடுமுடியில்
தேன்சொரி கங்கைத் தெளிநீர்க் கரையினில்
கானகந் தன்னில் கடுமறை நான்கனுள்
ஊனுடல் தேய உனையெங்கும் தேடுவர்
மானுடர் நாளெல்லாம்; மண்ணகந் தன்னிலே
வானுயர் மாடம் வளரும் பிரசாந்தி
மாநகர் வாழ்ந்திடும் வள்ளலைக் காணாதோர்!
கோனினைப் பாடிக் குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-10)

மனிதர்கள் எல்லாரும் தமது உடல் வற்றிப் போகும்படியாக (தவம்செய்து), அடர்த்தியாக பனியால் போர்த்தப்பட்ட இமயமலையின் சிகரங்களிலும், தேன்போல இனிப்பாகவும் தெளிவாகவும் இருக்கும் கங்கை நதியின் கரையோரத்திலும், காடுகளிலும், நான்கு வேதங்களுக்குள்ளும் உன்னைத் தேடுகிறார்கள்.

வானத்தைத் தொடும்படியான உயர்ந்த மாடங்களைக் கொண்ட பிரசாந்தியென்னும் பெருநகரத்தில் வள்ளலான நீ வசிப்பதை அவர்கள் பார்க்கவில்லை போலும்.

அப்பேர்ப்பட்ட எம் அரசனைப் பாடிக் குளிர்வோம் வாருங்கள்!

Monday, December 23, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 9

காலைக்காட்சிகள்!


துள்ளும் சிறுகன்று தோட்டத்தில் தாய்மடியை
வெள்ளைப்பல் லாலே விசைத்தே இழுப்பதுவும்
புள்ளினம் மாமரப் பூங்கிளையில் கண்விழித்து
பள்ளிச் சிறார்போல் பலப்பல பேசுவதும்
தெள்ளத் தெளியாத செக்கர்வான் ஓரத்தில்
பிள்ளைக் கதிரோன் பெருக முயலுவதும்
கிள்ளை மொழியாய் அறியாய் துயில்கின்றாய்
கள்ளீ எழுவாய் கடிதேலோ ரெம்பாவாய்!    (பாடல்-9)

சிறிய கன்றுக்குட்டி ஒன்று தாயின் மடியைத் தனது வெள்ளைப் பல்லால் கடித்து வேகமாக இழுக்கிறது.

 மாமரத்தின் கிளைகளில் அப்போதுதான் விழித்தெழுந்த பறவைகள் பள்ளிக்குழந்தைகள் போலக் கலகலவெனப் பேசிக்கொள்கின்றன.

சிவந்த அடிவானத்தில் சிறிதான சூரியன் தோன்றி ஒளிமிக வளர முயல்கிறது.

கிளியைப் போன்ற மொழியை உடைய என் தோழியே! இவற்றையெல்லாம் அறியாதவள்போல நீ தூங்குகிறாய்.

கள்ளி, விரைந்து எழுந்து வருவாயாக! 

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 8

அன்பைப் பெருக்கிப் பாவம் சுருக்குவோன்!


கருநிறம் வானில் கலைந்தொளிக் கீற்று
வருகிற நாழிகை வந்தனன் சாயி
அருண நிறத்தினில் அங்கி யணிந்து
திருமுகம் தன்னில் சிறுநகை சேர்த்து!
பெருகிடும் நெஞ்சினில் பேரன்பின் வெள்ளம்
அருகிடும் புன்மைகள் அண்ணல்முன் அம்மா!
வருவினை நீக்கியே வான்சுக மூட்டும்
ஒருவனைப் போற்றி ஒசிந்தேலோ ரெம்பாவாய்!    
(பாடல்-8)

வானத்தில் இருளின் கருநிறம் கலைந்து, மெல்லிய ஒளிக்கீற்றுத் தோன்றும் நேரத்தில் தரிசனம் கொடுக்க வருகின்றான் சாயி.

அவன் உதிக்கும் சூரியனின் செந்நிறத்திலேயே அங்கி அணிந்திருக்கிறான்.

அவனுடைய முகத்தில் மெல்லிய புன்னகை தவழ்கிறது.

அவனுடைய சன்னிதிக்கு வந்தவுடனேயே நமது மனதில் அளவற்ற அன்பின் வெள்ளம் பெருகுகின்றது. தாழ்ந்த குணங்கள் காணாமற் போகின்றன.

பாவம் தரத்தக்க செய்கைகளை நாம் செய்யவொண்ணாது விலக்கி (நம்மைத் திருத்தியமைத்து), தெய்வலோகத்தின் உயர்ந்த சுகத்தைத் தருபவனாம் சாயியைப் புகழ நளினமாக வருவாயாக!

Sunday, December 22, 2013

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 7

எவர் பழிச்சொல்லையும் செவியுறோம்!


ஊரார் மறைவாய் உரைப்பன கேட்கிலோம்
ஆரார் பழியும் அணுவும் செவியுறோம்
ஏரார் சிகையினன் எம்மனம் புக்கவன்
தாரார் எழிலுரு நாமமும் எண்ணியெண்ணி
ஆரோம் உணவும் அணுகிடோம் மஞ்சமும்
நீரார் விழியுடனும் நெஞ்ச நெகிழ்வுடனும்
வாராயென் தோழீ! மகதேவன் பர்த்தீசன்
பேரைப் புகழ்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-7)

எம் கண்ணுக்குக் காணாமல் எம்மை ஊரார் அலருரைப்பதைக் கேட்கமாட்டோம்.

எவர் பழித்துப் பேசுவதையும் சிறிதும் செவியில் வாங்க மாட்டோம்.

அழகிய கேசத்தை உடையவன், எமது மனங்களிலே புகுந்துவிட்டவன், மாலையணிந்தவனாகிய சாயியின் அழகிய உருவத்தையும் பெயரையும் மீண்டும் மீண்டும் மனதிலே நினைத்துக் கொண்டே இருப்போம்.

எமக்கு உணவும் வேண்டாம், படுக்கையும் வேண்டாம். தோழீ! நீ (பக்தியினால்) கண்ணீர் ததும்பும் கண்களோடும் நெகிழும் மனத்தோடும் வா!

மகாதேவனான பர்த்தீசனின் பெயரைப் புகழ்ந்து பாடி நாம் மகிழ்ச்சி அடையலாம்.

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 6

ஈஸ்வரம்பாவின் திருமகனைப் போற்றுவோம்


ஈசு வராம்பா எமதுல குய்திட
தேசுடைப் பிள்ளை யளித்தனள் தோழிகாள்!
நேசன் அவனெமது நெஞ்சில் நிறைந்தனன்
ஊசல் நிகர்மனம் ஓடாது மாற்றியே
பாச மறுத்தெம்முள் பக்தி நிரப்பினன்
காசறு தெய்வக் களிப்பைப் பெருக்கினன்
மாசறு மெண்ணம் செயல்சொல் லிவையெனும்
வாச மலர்கொண்டு வாழ்த்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-6)

தோழியரே! எம்முடைய இந்த உலகம் உய்யும்படி அன்னை ஈசுவராம்பா ஒளிமிகுந்த பிள்ளை ஒருவனைப் பெற்றுத் தந்திருக்கிறாள்.

அன்பனான அவன் எமது நெஞ்சத்தை நிறைத்துவிட்டான். ஊஞ்சலைப் போல அங்குமிங்கும் ஓடுகின்ற மனதின் அலைச்சலை நிறுத்தி, பாசத்தை அறுத்து, அதில் பக்தியை நிரப்பிவிட்டான்.

ஒரு சிறிது குற்றமும் இல்லாத தெய்வீக ஆனந்தத்தைப் பெருக்கிவிட்டான்.

அவனை மாசில்லாத எண்ணம், செயல், சொல் என்கிற மணமிகுந்த மலர்களால் பூசிப்போம் வா!

அருஞ்சொற்பொருள்: காசறு - குற்றமில்லாத

எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் மாசற்று ஒன்றாக இருப்பதே யோகம் என்று பகவான் கூறியிருப்பது இங்கே நினைக்கத் தக்கது.

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 5

பர்த்தீசன் நேயமே வேண்டுவோம்!



எந்தையும் தாயும் எமக்கெனத் தேடிடும்
விந்தை யிளைஞரை வேண்டி விரும்பிடோம்!
சிந்தையில் சீர்பர்த்தி செம்மல்தன் நேயமே
முந்தைநாள் தொட்டு முனைந்து வளர்ந்ததால்!
நிந்தனை யார்க்கும் நினையோம், வறியார்க்குக்
குந்துமணி யேனும் கொடுத்து தவிடுவோம்
இந்திர தேவர்கள் ஏத்திடும் சாயீசன்
சுந்தரப் பாதங்கள் சூழேலோ ரெம்பாவாய்!   (பாடல்-5)

விந்தையான இக்காலத்து இளைஞர்களை எமது வாழ்க்கைத் துணையாக எமது பெற்றோர்கள் தேடுகிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை விரும்பவில்லை.

சிறுவயது முதற்கொண்டே அழகிய பர்த்தியில் வசிக்கும் உயர்ந்தோனான சாயியின் மீதே நாங்கள் விருப்பத்தைத் தீவிரமாக வளர்த்துக்கொண்டுவிட்டோம்.

அவனை நேசிக்கும் நாங்கள் யாரையும் பழிக்க மாட்டோம். சிறிய குந்துமணி அளவாவது எங்களால் இயன்றபடி ஏழைகளுக்கு ஈதல் செய்வோம். இந்திராதி தேவர்கள் புகழ்கின்ற சாயீசனின் அழகிய பாதங்களைச் சென்றடையலாம் வா!