Monday, January 13, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 30

சத்திய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை தருபவன்!




சத்தியம் தர்மம் சரதமாய்ச் சாந்தியும்
நித்ய பிரேமை நிரம்பு மகிம்சையும்
இத்தரை மீதினில் எல்லோர்க்கும் தந்திடும்
சத்திய சாயியைச் சந்தத் தமிழாலே
பத்தன் மதுரன் பணிவுடன் பாடிய
தித்திக்கும் பாவையைச் செப்புவா ரெல்லாரும்
முத்தியும் செல்வமும் சித்திக்கப் பெற்றிடுவார்
சுத்தனைப் பாடிச் சுகித்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-30)

சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகியவற்றை பூமியில் வாழும் எல்லோருக்கும் தரவந்தவன் சத்திய சாயி.

அவனைச் சந்தமிகுந்த தமிழாலே பக்தனான மதுரபாரதி மிகப் பணிவோடு பாடிய இனிக்கின்ற இந்தச் ‘சாயி திருப்பாவை’யை ஓதுகின்ற யாவரும், மறுமையில் முக்தியும், இம்மையில் செல்வங்கள் நிரம்பிய வாழ்வும் பெறுவார்கள்.

அப்படிப்பட்ட தூயவனைப் பாடிச் சுகமடைவோம் வாரீர்!

Sunday, January 12, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 29

சமத்துவ நாயகன் சாயி!


எம்மத மாயினும் எந்தநா டாயினும் 
எம்மொழி யாயினும் எந்நிற மாயினும்
சம்மத மென்பான் சமத்துவ சாயியே!
தம்முள் பெருகும் தணியாத தாகத்தால்
செம்பொருள் தேடும் சிலர்க்கென வந்தனன்
எம்மவன் எம்மவன் என்றெவரும் கோரிடும்
செம்மலைச் சேரவே சீர்பாவை நோன்பினை
அம்ம!நாம் நோற்றோம் அருளேலோ ரெம்பாவாய்!    (பாடல்-29)

சமத்துவ நாயகனான எம் சாயி, ஒருவர் எந்த மதத்தினர், எந்த நாட்டினர், எந்த மொழி பேசுபவர், எந்த நிறங்கொண்டவராக இருந்தாலும் தனக்கு ஏற்புடையதே என்று கூறுவான்.

தமக்குள்ளே செம்பொருளான பரப்பிரம்மத்தைத் தேடுகிற தணியாத தாகம் கொண்ட சிலருக்கு வழிகாட்ட அவன் வந்துள்ளான்.

அவனை எல்லோருமே “இவன் என்னவன், இவன் என்னவன்” என்று கோருகின்றனர்.

அப்படிப்பட்ட மேலோனை அடைவதற்காக நாங்கள் பாவை நோன்பு நோற்கிறோம்.

அம்மா! அவன் அருளவேண்டும்!

Saturday, January 11, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 28

அன்பில் சிறைப்படுவோனே!




அறிவிய லார்க்கும் அகப்படு கில்லாய்
பொறியிய லார்க்குப் புலப்படு கில்லாய்
அறிவும் பொறியும் அகமும் பொருளும்
அறிவரியாய் அன்பில் சிறைப்படு வோனே
நெறியினில் நிற்பார் நினைவி லிருப்பாய்
பொறிகளை வென்றவர் புத்தியி லுள்ளாய்
குறிகுணம் இல்லாய்! அரிவையர் வந்தோம்
பறைதரல் வேண்டும் பரிந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-28)

நாம ரூபங்களைக் கடந்த பரம்பொருளான சாயீசா!

நீ விஞ்ஞானிகளின் சோதனைகளுக்குக் கிட்டமாட்டாய்; பொறியியலாரின் உபகரணங்களுக்குப் புலப்பட மாட்டாய்.

உன்னை அறிவாலும், பொறிகளாலும், மனதாலும், செல்வத்தாலும் அறிய முடியாது.

ஆனால், அன்பிலே சிறைப்பட்டுவிடுவாய்!

தமக்கென விதிக்கப்பட்ட நெறிகளில் நின்று ஒழுகுபவரின் நினைவில் நீயே நிற்பாய்.

பொறி, புலன்களை யார் வெற்றி கொள்கிறார்களோ அவர்களுடைய புத்தியில் நிற்பாய். (நோன்பு நோற்கும்) பெண்களாகிய நாங்கள் வந்திருக்கிறோம், எங்களுக்கு நீ பறை தர வேண்டும்.

Friday, January 10, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 27

எம் நிலை பாராய்!


உன்னை நினைந்தோம் உருகினோம் அன்பினில்
தன்னை மறந்தோம் தவித்தோம் குழறினோம்
அன்னம் படுக்கை அணிகள் மறந்தனம்
அன்னையும் தந்தையும் அல்லல் மிகவெய்த
எந்நேர மாயினும் நின்திரு நாமமே
உன்னிக் கசிந்தோம் உடலது வாடினோம்
பொன்னே மரகதமே புட்டப்பர்த் தீசனே
இன்னமும் தாமத மேனேலோ ரெம்பாவாய்!    (பாடல்-27)

பொன்னே, மரகதமே, புட்டப்பர்த்தீசனே! உன்னை நினைத்து நாங்களெல்லாம் அன்பில் உருகுகிறோம். எங்களை மறந்து தவித்து வாய் குழறுகிறோம்.

உணவும், படுக்கையும், ஆடையணிமணிகளும் மறந்தே போய்விட்டோம்; எங்கள் தாய் தந்தையர் எங்களுடைய நிலைமையைப் பார்த்து வருந்துமளவுக்கு நாங்கள் எந்த நேரமும் உன்னுடைய திருப்பெயரையே நினைந்து நினைந்து உருகுகிறோம்.

எங்கள் உடல் வாடி மெலிந்துவிட்டது. இன்னமும் எம்மைத் தன்னோடு கலவாமல் ஏன் தாமதம் செய்கிறாய்!

Thursday, January 9, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 26

மனித வடிவில் வந்த மாதவன்




பனிமணி தூங்கும் பரங்கியும் பீர்க்கும்
நனிபூத் திலங்கிடு மார்கழி நாளில்
கனியிதழ் வாய்ச்சியே கண்விழி யாயோ!
மனிதரும் மாதவரும் மற்றோரும் வந்து
குனிதரும் சேவடிக் கோமகனைப் பாடிப்
புனித மடைந்து பொலிவுற வாராய்
மனித வடிவினில் வந்தவெம் நாதன்
இனிமையை எண்ணி இசைத்தேலோ ரெம்பாவாய்     26

(கோலங்களில் அழகுற வைத்த) பரங்கிப் பூவிலும் பீர்க்கம் பூவிலும் அழகான பனித்துளிகள் வைரம்போல ஒளிரும் இந்த மார்கழி நாள் காலையில், கனிபோன்ற அழகிய வாய்கொண்ட என் தோழியே, நீ விழித்தெழ மாட்டாயோ!

மனிதரும், ரிஷிகளும், மற்றவர்களும் வந்து நமஸ்கரிக்கின்ற சிவந்த பாதங்களை உடைய திரிபுவன சக்ரவர்த்தியைப் போற்றிப் பாடி நாமும் புனித ஒளியைப் பெறலாம் வாராய்!

மனித வடிவிலே வந்த எம் சாயிநாதனின் சுந்தர ரூபத்தை நினைத்துப் பாட வாராய்! 

Wednesday, January 8, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 25

கிருஷ்ணனே சாயி கிருஷ்ணன்!




பர்த்தி புரியில் பிறந்தாய் அருகிருந்த
கர்ணம்சுப் பம்மா மனையில் வளர்ந்தாய்
கருநிறக் கண்ணனாய் பூதகிநஞ் சுண்டனை
பர்த்தியில் நஞ்சுடைத் தின்பண்ட மெல்லாம்
ஒருவர்க்கும் தாரா தொருவனே தின்றாய்
கருவில் திருவே கருமணியே கண்ணில்
உருவே அருவே உவமை யிலாத
திருவின் திருவைத் தெரிந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-25)

(ஈஸ்வராம்பா என்ற) ஒரு பெண்ணுக்கு மகனாகப் பிறந்தாய். ஆனால், கர்ணம் சுப்பம்மா என்ற மற்றொரு தாயின் வீட்டில் (கிருஷ்ணனைப் போலவே) வளர்ந்தாய். கருநிறக் கண்ணனாக இருந்தபோது பூதகியின் மார்பில் நச்சுப் பாலைக் குடித்தாய். பர்த்தியிலே நஞ்சு கலந்த தின்பண்டத்தை நண்பர்களுக்குத் தராமல் நீயே தின்று, அவர்களைக் காத்தாய்.

கருவிலே வளர்ந்த தெய்வீகச் செல்வமே, கண்ணில் பாவையே, உருக்கொண்டிருந்த போதும் உருவமற்றவனே, உவமைகூற இயலாத லக்ஷ்மி தேவிக்கே செல்வமான சாயி என்னும் திருவே, உன்னை நாங்கள் தெரிந்துகொண்டோம்!

Picture courtesy: saibabaofindia.com 

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 24

பதினான்கு வயதில் ‘நான் சாயி பாபா’ என்று அறிவித்தவா....!


ஈரைந் துடனீ ரிரண்டாம் அகவையில்
பாரோ ரறிந்திட பாபாவென் நாமமென்றும்
சீரடி தோன்றிய செம்மலும் யானென்றும்
ஊரறியச் சொல்லி ஒளிபெற நின்றனை
ஆரே அறிவார் அரியநின் மேன்மைகள்
நேரினில் நோக்கியும் நீங்கில தேமாயை
யாருளர் நின்னை யலாலெழில் சத்திய
நாரா யணனே நமக்கேலோ ரெம்பாவாய்!     (பாடல்-24)

பதினான்கு வயதாகும் போது உலகோர் அறியும்படி “என் பெயர் சாயி பாபா, முன்னர் ஷீரடியில் சாயியாக அவதரித்தவனும் நானே” என்று அறிவித்து ஒளிபெற நின்றாய்.

சிந்திக்கவும் அரிதான நின் மேன்மையை யாரே அறிவார்!

உன்னை நேரில் நாங்கள் கண்ணாலே பார்த்துவிட்டோம், ஆயினும் எங்கள் மாயை அகலமாட்டேன் என்கிறதே.

சத்திய நாராயணன் என்ற இயற்பெயர் கொண்டவனே, உன்னைவிட்டால் எங்களுக்கு வேறு கதி யார் இருக்கிறார்கள்!

சிறப்புப் பொருள்:

நேரினில் நோக்கியும் நீங்கிலதே மாயை: இமயமலையில் கடுந்தவம் செய்பவருக்கும் வாய்க்காத உன் தரிசனப் பேறு உன் பெருங்கருணையால் எங்களுக்கு வாய்த்துள்ளது. ஆயினும், மாயையின் காரணமாக, உன்னையும் எம்போன்ற மனிதன், மாயாஜாலம் செய்பவன் என்றெல்லாம் கருதி, ஓரொரு சமயம் வாளாவிருந்துவிடுகின்றோம். நீ சொல்லும் நெறிகளைக் கடைப்பிடித்து நினது அருகே நெருங்கும் தகுதியைப் பெறாது தவறிவிடுகிறோம். அந்த மாயையிலிருந்து மீட்பதும் நீயே அன்றோ சாயி!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 23

பிரகலாதனைக் காத்தவனே, எமக்குப் பறை தருவாய்!




உச்சி மலைநின் றுருட்டிய போதிலும்
அச்ச மிலாமலே ஐய,நின் நாமத்தை
உச்சரித்த பாலன் ஒருவிர லால்சுட்டி
நச்சிய தூணில் நரசிம்ம மாகவே
அச்ச முறும்வண்ணம் ஆர்த்தே யெழுந்தவா
அச்சுதா சத்திய சாயீசா என்றுனைப்
பிச்சியர் நாம்பாடிப் பெட்போ டணுகினோம்
மெச்சிப் பறைதருக மீண்டேலோ ரெம்பாவாய்!    (பாடல்-23)

பிரகலாதனை மலையுச்சியிலிருந்து உருட்டிய போதும் அவன் உன் நாமத்தை உச்சரித்தான். அவன் தனது ஒரு விரலாலே (இதிலும் இருக்கிறான் என்று) சுட்டிக் காட்டிய தூணிலிருந்து நரசிம்மமாக, எல்லோரும் அஞ்சும்படி உரக்க கர்ஜித்தபடித் தோன்றியவனே! அச்சுதா, சத்திய சாயீசா என்று பித்துப் பிடித்தாற்போல பாடிக்கொண்டு, மிக விருப்பத்தோடு உன்னை நாங்கள் அணுகுகிறோம்.

எங்களது பக்தியை மெச்சி மீண்டும் எமக்கு நீ பறை தருதல் வேண்டும்!

Monday, January 6, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 22

காலத்துக்கேற்ற கல்வி தந்தனை!

ஸ்ரீ சத்திய சாயி உயர்கல்வி நிறுவனம், புட்டபர்த்தி

இதமல பேசி இதமல செய்து
பதமல தேர்ந்து பழகுதல் எங்கள்
சுதந்திரம் என்றே யுரைக்கும் இளையோர்
விதமுறு வேடம் விலக்கிட வேண்டி
புதுவிதக் கல்வி புகுத்தினை, வேதம்
புதுக்கினை, எங்கும் பொலிவாய்ப் பஜனை
எதிரொலித் தின்றெமக் கின்பம் பெருக்கிக்
குதுகலம் தந்தாய் குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-22)

(இன்றைய காலத்தில்) பிறருக்கு இனிமை தராத சொற்களைப் பேசி, இதம் தராத செயல்களைச் செய்து, பக்குவமில்லாதவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதையே இளையோர் சுதந்திரம் என்று தவறாக எண்ணுகின்றனர்.

இந்தத் தவறான கோலத்தை அகற்றும் பொருட்டாக நீ புதுவிதமான (விழுக்கல்வி - Education in Human Values, வித்யாவாஹினி போன்ற) கல்வித் திட்டங்களை ஏற்படுத்தினாய்;

வேதம் ஓதுதலைப் புதுப்பித்து எங்கெங்கும் ஒலிக்கச் செய்தாய்;

பஜனை என்கிற துதிப்பாடல் எங்கெங்கும் எதிரொலிக்கும்படியாக பொலிவுறச் செய்து, எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படுத்தி, அதனால் நீயும் மனம் குளிர்ந்தாய்!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 21

மாசகற்ற வந்தவன் புகழ் பேசு!


காற்றொலி தண்ணீர் ககனம் புவியெனச்
சாற்றிய யாவையும் மாசு படுத்தினர்
தேற்றரு மானுடர்! தேவதே வாநின்றன்
மாற்றரு மாற்றலால் மாற்றியிவ் வண்டத்தில்
போற்றரு தூய்மை புகுதரச் செய்குவாய்!
நோற்றனம் பாவைக்கு நோன்பினை அய்யனே!
போற்றிநின் பேரருளால் பொய்யா மழைபொழிக!
கூற்றம் குதித்தோனைக் கூறேலோ ரெம்பாவாய்    (பாடல்-21)

காற்று, ஒலி, வானம், பூமி என்று கூறத்தக்க எல்லாவற்றையும் மாசுபடுத்திவிட்டனர், இந்தத் திருந்த மாட்டாத மனிதர்கள்.

தேவதேவனே! உன்னுடைய அழிக்கவொண்ணாத ஆற்றலால் நீதான் இவற்றை மாற்றியமைத்து, உலகில் மிகுந்த தூய்மை மீண்டும் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்.

அதற்காக நாங்கள் பாவை நோன்பினை நோற்கிறோம்.

உன்னுடைய பேரருளாலே உலகில் மழை பொய்க்காமல் காலத்தில் பெய்திட வேண்டும்.

எமனையே அழித்தவன் புகழைக் கூற வாரீர்!

சிறப்புப் பொருள்:

மனிதன் இயற்கையை மதிக்காமல் அதனைத் தவறாக, மிகையாகப் பயன்படுத்தியும் மாசுபடுத்தியும் பல்வேறு பேரிடர்களுக்கும் (நிலநடுக்கம், வெள்ளம், புயல், கடற்சீற்றம், வறட்சி போன்றவை) அவன் காரணமாக இருக்கிறான். பாவை நோன்பினை அதற்குக் கழுவாயாக இந்த இளம்பெண்டிர் நோற்பதாகக் கூறுகிறார்கள். 

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 20

வாக்கைக் காப்பாற்ற வந்தவன்!


தீது மலிந்திட தர்மம் நலிந்திடும்
போதிலும் மாதவர் துன்புற் றசுரர்கள்
மேதினி யில்பெரும் ஆதிக்கம் ஓச்சிடும்
சோதனைக் காலம் வரும்போ தினிலெலாம்
பூதலத்தில் வந்து பிறப்பெடுப் பேனென
கீதையில் போதித்தோன் கீழிறங்கி வந்தனன்
சாதுக்கள் போற்றிடும் சத்திய சாயியை
காதலில் போற்றிக் கரைந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்- 20)

“எப்போதெல்லாம் தீமைகள் பெருகி, அறம் அருகுகிறதோ, தவசியரும் ஞானியரும் துன்புறும்படியாக அசுரர்களின் ஆதிக்கம் ஓங்குகிறதோ, அப்படிப்பட்ட சோதனைக் காலம் வரும்போது நான் பூமியில் அவதரிப்பேன்” என்று கீதையில் கூறிய அவனே (சாயியாக) கீழிறங்கி வந்திருக்கிறான்.

சாதுக்களெல்லாம் போற்றிப் புகழுகின்ற சத்திய சாயியைக் காதலோடு புகழ்ந்து உருகலாம் வாரீர்!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 19

கா வா வா கேசவா!


நாவால் வழுத்துவோம் நன்னடத்தை யாற்பணிவோம்
பாவால் வழுத்துவோம் பக்தியில் வெள்ளமென
மேவிப் பெருகும் விழிநீர் அருவியால்
தேவா நினதருட் பாதம் கழுவுவோம்
காவாவா கேசவா காகுத்தா தேவர்க்குச்
சாவா மருந்தைக் கொடுத்த சதுரனே!
மூவா தவனே! முதல்நடு பின்னான
ஓவா ஒளியே உகந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-19)

(சாயீசனைப் போற்றி) நாவால் வாழ்த்துவோம், அது போதாது, நல்ல நடத்தையால் அவனைப் பணிய வேண்டும்;

பாசுரங்களாலே வாழ்த்துவோம்; பக்தியினால் நமது கண்களில் அருவிபோலப் பெருகும் கண்ணீரால் உனது அருட்பாதங்களை நீராட்டுவோம்.

கேசவா, ராமச்சந்திர மூர்த்தியே, தேவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்த நீலகண்டனே, என்றைக்கும் மூப்படையாதவனே;

ஆரம்பமும், நடுவும் முடிவும் என்று எல்லாமுமான அழிவற்ற ஓளியே, எங்களைக் காக்க நீ வரவேண்டும்.

எம்மீது நீ அன்பு செலுத்தி அருள்வாயாக!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 18

ஆபத்பாந்தவனை வணங்குவோம்!



கோபம் விலக்கி குணநலம் கொண்டுய்ந்து
பாபம் விலக்கிப்பின் பக்தர் பணிசெய்து
தீபம் விளக்கித் தினமும் தொழுதேத்தி
நாபிக் கமலத்தில் நான்மு கனைவைத்த
கோபா லனை,புட்டப் பர்த்தி கிராமத்தின்
சாபம் விலக்கிய சத்திய சாயியை
ஆபத்தை நீக்கிடும் ஆனந்த ரூபனை
வா,பணிந் தேத்தி வணங்கேலோ ரெம்பாவாய்! (பாடல்-18)

கோபத்தைத் தவிர்த்து, நல்ல குணங்களைக் கொண்டு மேன்மையடைந்து, பாபச் செயல்களை விலக்கி, இறையன்பருக்குப் பணி செய்து, தீபத்தை நன்கு துலக்கி ஏற்றி, தினந்தோறும் உன்னப் போற்றித் துதிப்போம்.

இவன் தனது கொப்பூழில் வளர்ந்த தாமரையில் பிரம்மனை வைத்த கோபாலன்.

புட்டபர்த்தி பெற்ற சாபத்தை நிவர்த்தி செய்தவன்;

நமக்கு வரும் ஆபத்துகளை அறிந்து விலக்குகின்றவன்; ஆனந்தமே வடிவானவன்.

அப்படிப்பட்டவனை நாம் பணிந்து அன்போடு வணங்கலாம், வாரீர்!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 17

நெடுங்காலத் துணை நீயே!


ஸ்ரீ சத்திய சாயி உயர்மருத்துவ நிலையம் 

கல்வி, சிகிச்சைகள் கட்டண மின்றியே
நல்கிடு நாயகமே! நல்லரசே! கற்பகமே!
பல்விதத் துன்பமும் பாடாய்ப் படுத்துகையில்
அல்லல் எலாந்தீர்த்தே அன்பினை யேபொழிவாய்
இல்லை யெனாமல் எவர்க்கும் வழங்கிடும்
வல்லோன் உனக்கின்னும் வல்லியர் எங்களின்
தொல்லை யகற்றிடத் தோன்றவு மில்லையோ!
ஒல்லை யொருதுணை நீயேலோ ரெம்பாவாய்!     (பாடல்-17)

(சாயியை நோக்கிப் பாடுவதாக இந்தப் பாசுரம் அமைந்துள்ளது) 

கல்வி, சிகிச்சை போன்றவற்றைக் கட்டணமில்லாமல் வழங்கும் எம் தலைவனே! (மூவுலகுக்கும்) நல்ல அரசனே!

கற்பகம் போன்று வாரி வழங்குபவனே! யாருக்கும் பலவிதமான துன்பங்கள் வந்து மிகவும் கஷ்டப்படுத்தும்போது, அவற்றையெலாம் தீர்த்து உனது அன்பை அவர்மீது பொழிவாய்.

இல்லையென்று கூறாமல் வழங்குகிற வல்லமை உடையவன் நீ.

(அப்படியிருந்தும்) பெண்கொடிகளான எங்களுடைய (கோபியருடையது போன்ற) காதல் என்ற இந்தத் துன்பத்தை நீக்கத் தோன்றவே இல்லையா! நெடுங்காலமாகவே எங்களது ஒரே துணை நீயே அல்லவோ, ஓ சாயி!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 16

சாயி சொல் கேட்போம்


அன்னாய்! உனதுமகள் ஆதவன் வந்தபின்
இன்னம் உறங்குவ தென்னே! எழுப்புகிலை?
பொன்னகை சோம்பல் புறம்பேசல் பொய்நீக்கி
நன்னடத்தை பூண்டு நலமிலாக் கேளிக்கை
மின்னும் பகட்டு பொறாமை யகற்றியே
தின்னுவ இன்னவென்று தேர்ந்து நுகர்குவோம்
சொன்னமும் அன்னமும் நீரும் வழங்குவோம்
முன்னவன் சாயிசொல் கேட்டேலோ ரெம்பாவாய்!    (பாடல்-16)

(எவ்வளவு கூறியும் தமது தோழி எழுந்திராததைக் கண்டு அவளுடைய அன்னையிடம் புகார் கூறுவதாக அமைந்துள்ள பாடல் இது).

அம்மா! சூரியனே வந்துவிட்டான் இன்னும் உன் மகள் உறங்கிக் கொண்டிருப்பது எப்படி? நீதான் அவளை எழுப்பமாட்டாயா?

(இந்தப் பாவை நோன்பை நோற்கும் நாங்கள்) பொன்னாலான நகைகளை அணியமாட்டோம்; புறங்கூறுதலும் பொய் பேசுவதும் விலக்குவோம்;

நல்ல நடத்தை பூண்டு ஒழுகுவோம்;

எந்தப் பொழுதுபோக்கு நலத்தைத் தராதோ அதையும், ஆடம்பரத்தையும், பொறாமையையும் நீக்கிவிடுவோம்;

நாம் உண்ணும் பொருள் நல்லதா அல்லவா என்று ஆராய்ந்து பின்னர் உண்ணுவோம்;

தங்கமும், உணவுப்பொருளும், நீரும் தானமாக வழங்குவோம்.

ஆதிமூலமான சாயியின் அருள்மொழிக்குக் கீழ்ப்படிந்து நாங்கள் இவற்றைச் செய்கிறோம்!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 15

மானுட உடலெடுத்து வந்த தெய்வம்



திசைதிசை யெங்கும் திகழும்பன் னாட்டார்
நசையுடன் எண்ணிலர் வந்தனர் காணாய்!
விசைமிகச் சுற்றி விரிக்கும்தன் கையின்
அசைவினில் நீறும் அணிமணி பொன்னும்
இசைவித் தெவருக்கும் ஈந்தனன் சாயி!
தசையுட லோடு மனிதர்வாழ் பூமி
மிசைவரு தெய்வதம், வேதமு தல்வன்,
இசையினைப் பாடி இசைத்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-15)  

வெவ்வேறு திசைகளில் இருக்கின்ற பற்பல நாடுகளிலும் இருந்து எண்ணற்ற அன்பர்கள் மிகுந்த விருப்பத்துடன் வந்திருப்பதைப் பாராய்!

விரைந்து கையைச் சுழற்றிப் பின்னர் அதனை விரித்து அதிலிருந்து திருநீறும், பொன்னாலான ஆபரணங்களும் தோற்றுவித்து பலருக்கும் சாயி கொடுக்கிறான்.

தசையினாலான (மானுட) உடலைத் தான் (நம்பொருட்டாக) எடுத்துக்கொண்டு, இந்த மனிதர்கள் வாழும் பூமிமீது வந்திருக்கும் தெய்வமும், வேதங்கள் கூறும் முதற்பொருளும் ஆன சாயியின் புகழை இசையோடு பாடலாம் வாரீர்!

Wednesday, January 1, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 14

பிரபஞ்சம் படைத்தவன் பெருமை யாரே அறிவர்!



அண்ட சராசரம் ஆக்கி அதிலிடம்
கொண்டபல் கோள்களும் தாரகைக் கூட்டத்தின்
மண்டலமும் நீண்டிடும் வானியல் பாட்டையில்
எண்ணற் கரியன எண்ணில செய்தனன்
அண்ணல் அழகன் அறிவன் பெருமைகள்
திண்ணமாய் யாவும் தெரிந்தவர் யாருளார்?
விண்ணவர் வேந்தனை வேண்டுவர் காந்தனை
பண்ணிசை பாடிப் பரவேலோ ரெம்பாவாய்!     (பாடல்-14)

அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து, அதிலே சிந்தனைக்கும் எட்டாத கிரகங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் வானப்பாதையிலே கணக்கில்லாமல் படைத்தவனான சாயியின் பெருமைகள் முழுவதையும் யாரே நிச்சயமாக அறிந்து வைத்திருக்கிறார்!

அழகனும் அறிவின் இருப்பிடமும் தேவர்களின் சக்ரவர்த்தியும், தன்னை விரும்புவோரைக் கவர்ந்திழுப்பவனுமான அண்ணலை, இசைப்பாடல் பாடித் தொழுவோம் வாரீர்!

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 13

ஆலத்தை உண்டவன் வந்தான்!


ஆலத்தை உண்டே அகிலம் புரந்தனன்
காலனை வென்றான் கருநிற மாரனைக்
கோல விழியின் கொடுந்தழ லால்எரித்தான்
ஞாலம் தழைக்கவும் நாமும் செழிக்கவும்
சாலவும் அன்பொடு சாயி அவதரித்துச்
சீலம் பலப்பல செப்பி யருளினான்
மூலப் பரம்பொருள் முன்னவன் தன்னிரு
காலைப் பணிவோம் கசிந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-13)

ஆலகால விஷத்தை விழுங்கி இந்த உலகத்தைக் காத்தான். எமனை வெற்றி கொண்டான். கருநிறம் கொண்ட மன்மதனைத் தனது அழகிய நெற்றிக் கண்ணின் கொடிய நெருப்பாலே எரித்தான் அந்தச் சிவபெருமான்.

இப்போது அவனே இந்த உலகம் தழைக்கும்படியாகவும், நாமெல்லோரும் செழிப்பு அடையும்படியாகவும் மிகுந்த அன்போடு சாயியாக அவதரித்திருக்கிறான்.

நமக்குப் பல உயரிய ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறான். அவனே இந்தப் பிரபஞ்சத்தின் மூலப்பரம்பொருள். இதன் ஆதியும் ஆவான். அவனது இரண்டு பாதங்களையும் மனமுருகிப் பணிவோம் வருவீராக.

சிறப்புப் பொருள்:

பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வந்தது விஷம். அதன் வெம்மையால் உலகம் அழிந்துபடும் என்ற நிலையில் அதனைத் தானே விழுங்கிய தியாகராஜன் சிவபெருமான்.

அவ்வாறு அன்பர் துன்பத்தையெல்லாம் தானேற்றுக்கொண்டவன் சாயீசன். பக்தி நெறியில் வந்தோர்க்குக் காமனை வெல்லும் ஆற்றல் கொடுத்தவன். அவ்வாறு காமனை வென்று ஞானவழி நின்றோர்க்குக் காலனையும் அணுகவொட்டாது செய்தவன் அவனே என்பது இப்பாடலின் குறிப்பு. 

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 12

உய்யும் வழிகாண வாருங்கள்



வயிர நகையாய் வடிவெழில் நங்காய்!
அயராமல் ஆயிரம் காதைகள் சொன்னாய்,
“கயிறா லுரலினில் கட்டுண்டோன் வந்தான்
உயர்பர்த்தி தன்னிலே, உள்ளம் கவர்ந்தான்
உயிரும் அவன்”என் றுரைத்தசொல் போச்சோ!
துயிலும் விலக்கலை! தோழியர் நாம்போய்
புயல்வண்ணன் சாயீசன் பொன்னடி போற்றி
உயல்வழி காண்போம் உயர்ந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-12)

வைரம்போலப் புன்னகைக்கும் அழகிய வடிவையுடைய பெண்ணே! 

“கயிற்றினால் உரலோடு கட்டப்பட்டவன் (கண்ணன்) பூமிக்கு மீண்டும் வந்திருக்கிறான். அவன் உயர்ந்த புட்டபர்த்தியில் அவதரித்திருக்கிறான். என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்ட அவனே என் உயிரும்கூட” என்றெல்லாம் சளைக்காமல் ஆயிரம் கதைகள் கூறினாயே. அந்தச் சொல்லெல்லாம் போய்விட்டதோ? (அவனுக்காகக்கூட) உறக்கத்தை நீ விலக்கவில்லை. 

தோழியரே வாருங்கள்! நாம் போய், மேக வர்ணம் கொண்ட சாயீசனின் பொன்னடிகளைப் போற்றி, முக்தி அடைவதற்கான வழியைப் பெற்று உயர்வோம் வாருங்கள்!