Thursday, October 4, 2018

ஆரஞ்சு அங்கி அணிந்த நபர்!




எழுதியவர்: மார்கரிட்டா இங்கில்ஸ், சான் சால்வடார்

நான் இன்சூரன்ஸ் முகவராக இருந்தேன். 1988 ஆகஸ்டு மாதம் நகரப் பேருந்தில் ஏறியபோது டிரைவர் திடீரென்று பஸ்ஸைக் கிளப்பிவிட நான் வெளியே தூக்கி எறியப்பட்டேன். சுயநினைவற்ற எனது உடலை ஒரு டாக்சி டிரைவர் தூக்கிக்கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார். பல நாட்கள் நான் கோமாவில் இருந்தேன். சற்றே நினைவு திரும்பியபோது படுக்கையில் என்னருகே ஆரஞ்சுவண்ண அங்கி அணிந்த ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரது ‘ஆஃப்ரோ தலைமுடி’ வினோதமாக இருந்தது. எனக்கு மீண்டும் நினைவு திரும்பியபோதும் அவர் அருகேதான் இருந்தார். ஆனால் எதுவும் பேசவில்லை. எனக்கு அவரிடம் உதவி கேட்டுப் பிரார்த்திக்க வேண்டுமெனத் தோன்றியது. என்னுடைய இரண்டு வயது மகளுக்குத் தாயார் தேவை என்பதால் நான் உயிர் பிழைக்க விரும்பினேன். அந்த அறிமுகமில்லாத மனிதர் யாரென்பது எனக்குத் தெரியவில்லை. நான் உறங்கிவிட்டேன். மீண்டும் விழித்தெழுந்ததும், நர்சுகளிடமும் டாக்டர்களிடமும் ஆரஞ்சு உடையிலிருந்தவர் யார் என்று கேட்டேன். யாருக்கும் தெரியவில்லை.

உடல்நிலை தேற இரண்டு மாதம் ஆகிவிட்டது. பிறகு என் அலுவலகத்துக்குப் போனேன். இரண்டு மாத காலமாக நான் இன்சூரன்ஸ் விற்கவில்லை என்பதால் என்னைப் பணிநீக்கம் செய்துவிட்டார்கள். நான் மனமுடைந்து போய்விட்டேன். எங்கள் ஊரில் இருந்த சாயிபாபா மையத்துக்குச் செல்லும்படி நண்பர் ஒருவர் கூறினார். ஒரு வியாழக்கிழமையன்று அந்த மையத்துக்குச் சென்றேன். அங்கு பீடத்தில் இருந்த படத்தைப் பார்த்ததும் எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. நான் ஊமையாகி நின்றேன். *என் படுக்கையில் அமர்ந்திருந்த அந்த அறிமுகமில்லாத மனிதர் சாயிபாபா தான்!*

அந்த மையத்தில் நான் சந்தித்த ஒரு பெண்மணி ரேடியோ நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகக் கூறினார். நல்ல பிரஜைகள் செய்யும் நற்பணிகளைக் குறித்த செய்தித் தொகுப்பைத் தனது ரேடியோ நிலையம் ஒலிபரப்புகிறதென்று விவரித்தார். “Voice of the Avatar" என்ற நிகழ்ச்சியைச் சாயி அன்பர்களின் குரலில் ஒலிபரப்பி வருவதாகவும் கூறினார். தவிர பைபிள் கதைகள், காய்கறி உணவு தயாரித்தல், சங்கீதம் குறித்த நிகழ்ச்சிகளும் இருந்தன. அவர் எனக்குச் செய்தியாளர் மற்றும் அறிவிப்பாளர் பணியைக் கொடுப்பதாகக் கூறினார். நான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தேன்.

சுவாமி எனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்து, உலகத்தைப் புதிய கண்களால் பார்க்க வைத்ததற்கு நான் சந்தோஷம் அடைகிறேன்.

ஆதாரம்: Sanathana Sarathi, May 1989

No comments:

Post a Comment