Thursday, October 4, 2018

ஒரு பூரண அவதாரத்துக்குச் சேவை செய்யும் வாய்ப்பு



கூறியவர்: டாக்டர் ஸ்ரீகாந்த் சோலா, பெங்களூரு

நான் கிளீவ்லாண்ட் கிளினிக்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் இளம் இதயமருத்துவர். எனது துறைத்தலைவர் உலக அளவில் புகழ்பெற்றவர். என்னைச் சுற்றிலும் அங்கே தத்தம் துறைகளில் மிகவும் பிரசித்திபெற்ற மருத்துவர்களும் இதய அறுவைசிகிச்சை நிபுணர்களும் இருந்தார்கள். ஒருநாள் சேர்மன் என்னிடம் வந்து, “சிறிது காலமாக நான் உங்களைக் கவனித்து வருகிறேன். நமது துறையின் சூப்பர்ஸ்டார்களில் நீங்கள் ஒருவர். சிறிதுகாலத்தில் நீங்கள் சேர்மன் ஆக வாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார். அப்படி ஆவதற்கு அவர் என்னைத் தயார்படுத்தி வந்தார்.

ஒருநாள் சாயி மையத்திலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. ஆஞ்சியோப்ளாஸ்டி போன்றவற்றில் பயிற்சி பெறுவோருக்கு ஒயிட்ஃபீல்டு மருத்துவமனையின் இதயநோய்த் துறையில் உதவித்தொகையுடன் கூடிய ஃபெலோஷிப் ஒன்று இருப்பதாக அதில் காணப்பட்டது. எனது பயிற்சிகள் முடிந்துவிட்டன என்பதால் எனக்கு அதில் எதுவுமில்லை. மின்னஞ்சலின் இறுதியில் ஒரு வரி காணப்பட்டது: “இதயமருத்துவ ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. சுயகுறிப்புகளுடன் விண்ணப்பிக்கலாம்” என்று காணப்பட்டது. “ஆஹா” என்று நான் எண்ணினேன். உடனே என் மனைவி ஷிவானியை போனில் அழைத்தேன். ஏதோ வேலையாக இருந்தார் போலும். பின்னர் நான் வார்டுகளில் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த போது அவர் கூப்பிட்டார். “சுவாமியின் ஒயிட்ஃபீல்டு மருத்துவ மனையில் கார்டியாலஜிஸ்ட் பணியிடம் இருக்கிறது, என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டேன். ஒரு நொடிகூடத் தாமதிக்காமல் அவர், “கண்டிப்பாக நாம் போகலாம்” என்றார். அவ்வளவுதான். ‘வீட்டை என்ன செய்வது, இங்கேயிருந்து எப்படிப் போவது, நமது குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்’ என்கிற பேச்சு எதுவுமே இல்லை. சுவாமிக்குப் பணிசெய்கிற வாய்ப்பு வந்துவிட்டது.

இப்படி யோசியுங்கள்: நாமெல்லோரும் ராமபிரான் காலத்தில் வானரங்களாக இருந்தோம் என்று வைத்துக்கொள்வோம். அவரே நம்மிடம் வந்து ”நான் கடலுக்குக் குறுக்கே ஒரு பாலம் கட்டப் போகிறேன். அதற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது, வருகிறீர்களா?” என்று கேட்கிறார். பல வானரங்கள் துள்ளிக்குதித்து ஓடுகின்றன. ஆனல் நீ மட்டும், “நான் அங்கே வந்து பாலம் கட்டினால் எனக்கு நிறைய வாழைப்பழம் கிடைக்குமா என்று தெரியவில்லை. என்ன செய்வது? நான் இங்கேயே இருந்துகொள்கிறேன்” என்று சொல்கிறாய்!

பூரண அவதாரம் வந்திருக்கிறது, அவருக்குப் பணி செய்யும் வாய்ப்பு வந்திருக்கிறது. நான் நிறையச் சம்பாதிக்க முடியுமா என்றா கேட்டுக் கொண்டிருப்பாய்? எங்களுக்கு அமெரிக்காவில் பெரிய வருமானம் வந்துகொண்டிருந்தது, பெரிய வீடு இருந்தது, விதவிதமான கார்கள் இருந்தன, வசதியாகப் பயணித்தோம், மிகச்சிறந்த இடங்களில் தங்கினோம், உலகெங்கிலும் பன்னாட்டு மாநாடுகளில் நான் பேசினேன்; ஆனால், இங்கே சுவாமியிடம் பணியாற்றுவது அல்லது சுவாமியின் வேலையைச் செய்வது என்பது முன்பிருந்த எல்லாவற்றையும் விட மிகப்பெரியது என்பதை உணர்ந்தோம். இரண்டையும் ஒப்பிடவே முடியாது.

உண்மையில் சொகுசுகளும் செல்வ வளமும் கவர்ச்சியாக இல்லை, அவை எங்களது கவனைத்தைக் கலைத்தன என்றே நினைக்கிறேன். இங்கே (புட்டபர்த்தியில்) உட்கார்ந்திருக்கும்போது சுவாமி வருகிறார் அல்லது மஹாசமாதியை தரிசிக்கிறோம் என்றால் சுவாமியின் பிரேமையை உள்வாங்கிக் கொள்கிறோம். அவரது மஹாசமாதியில் இருந்தே அத்தனை தூய அன்பு வெளிப்படுகிறது. அதுதான் இறைவனின் கருணை!

சாயி சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவ மனை

ஒரு ரிக்‌ஷாக்காரர் அல்லது செருப்புத் தைப்பவருக்கு இங்கே நான் சேவை செய்கிறேன். தெருவோரத்தில் செருப்புத் தைத்துக்கொண்டிருந்த ஒருவரது இதயத்தின் ரத்தக்குழாயில் மோசமான அடைப்பு இருந்தது. அவருக்கு உடனடியாக ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை தேவைப்பட்டது. அதற்குக் குறைந்தபட்சம் வெளியே ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகியிருக்கும். அவரது வாழ்நாள் முழுவதிலும் சம்பாதிப்பதை விட இது அதிகம். அவர் அதற்கு எங்கே போவார்? நாங்கள் ஒரு பைசா வாங்காமால் ஆஞ்சியோப்ளாஸ்டி செய்தோம், அவர் சுவாமியின் மருத்துவமனையில் இருந்து ஒரு புன்னகையோடு வெளியேறினார். ஒரு தனிநபராகவும் மருத்துவராகவும் இதில் நான் பெறும் மனத்திருப்திக்கு வேறெதுவும் ஈடாகாது.

தர்மகாரியம் செய்தாலும் அந்தச் சூழல் சரியானதாக இருக்கவேண்டும் என்றே எவரும் விரும்புவார். ஒரு கையைப் பின்னால் கட்டிப்போட்டுவிட்டு, வசதிக்குறைவான இடத்தில் சேவை செய் என்றால் அது நடவாது. ஆனால் சுவாமியின் மருத்துவமனையில் எல்லா வளங்களும், வசதிகளும் உண்டு; சிறந்த மருத்துவர்கள், சிறந்த செவிலியர், அற்புதமான நிர்வாகிகள் இருக்கிறார்கள். தன்னிடம் படித்த மாணவர்களையே பயிற்றுவித்துச் சுவாமி இந்த இடங்களில் வைத்திருக்கிறார்.

இந்தச் சூழல் தெய்வீகமானது, ஆனந்தமானது!

(அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் ஸ்ரீகாந்த் சோலா, டியூக் யுனிவர்சிடி, எமரி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆகியவற்றில் ரெசிடன்சி செய்துவிட்டு, புகழ்பெற்ற கிளீவ்லாண்ட் கிளினிக்கில் இதயமருத்துவராகப் பணி செய்தவர். 2006, 2007 ஆண்டுகளில் அமெரிக்காவின் மிகச்சிறந்த இதயமருத்துவர் என அவரை நுகர்வோர் ஆராய்ச்சிக் கழகம் அறிவித்தது. உலக அளவில் புகழ்பெற்றிருந்த அவர் 2008ல் தனது மனைவி ஷிவானியுடன், சுவாயின் பணியில் ஈடுபடும் நோக்கத்துடன் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தார்.)

ஆதாரம்: ரேடியோ சாயி ஜர்னல், ஜூன் 2012

No comments:

Post a Comment