Monday, December 16, 2019

ஸ்ரீ சத்திய சாயி நவரத்தின மாலை




விநாயகர் காப்பு

 வேதநெறி நீர்த்துச் சுயநலமே வேர்விட்ட 
 தீதுமலி காலத்தில் வந்துதித்த - மாதவற்குப் 
 பண்பாய் நவமணிப் பாமாலை சாற்றிடவே 
 கண்பார் கணபதிநீ காத்து. 

பொருள்: வேதங்கள் காட்டிய வழியை மானுடன் கடைப்பிடிப்பது குறைந்து, எங்கும் எதிலும் சுயநலமே வேரூன்றியவிட்ட இந்தக் காலத்தில் (நம்மை உய்விக்கும் பொருட்டாக) பூமியில் வந்துதித்த மாதவனாகிய ஸ்ரீ சத்திய சாயிக்கு, பண்போடு ஒரு நவமணி மாலையைக் கவிதைகளால் சாற்றுதற்கு, விநாயகப் பெருமானே, நீ நினது பார்வையினாற் காக்க வேண்டும்.

1. வைரம்

 ஒளிவீசும் விழிவைரம் உவகை பொங்கக் 
 களிவீசும் நகைவைரம் பொதிகைக் குன்றின் 
 வளிவீசும் நடைவைரம் சாயீ  சா, நீ 
 அளிவீசும் அன்பென்னும் வைரக் குன்றம்! 

பொருள்:
சத்ய சாயீசா! உன் கண்கள் ஒளி வீசுகின்ற வைரங்கள்; மகிழ்ச்சி பொங்கக் களிப்பை அள்ளி வீசுகின்ற நின் சிரிப்பு வைரம்; பொதிகை மலையிலிருந்து கிளம்பி வருகின்ற தென்றலைப் போல நீ நடப்பது வைரம்; ஏன், நீயே கருணையைப் பொழிகின்ற அன்பாகிய வைரத்தாலான மலைதான்!

2. வைடூரியம்

குன்றாத குணக்குன்றம் கோடைக் கொண்டல்
மன்றாடும் சிவசக்தி மண்ணில் வந்த
பொன்றாத வைடூர்யம்! சத்ய சாயீ
கன்றாத கருணைகொள் கலியின் தெய்வம்!

பொருள்:
சத்ய சாயி பகவானே! நீ ஒருபோதும் குறைவுபடாத பண்புகளின் குன்றம்; கோடைகாலத்தில் குளிர்விக்க வந்த மழைமேகம்; சித்சபையில் சேர்ந்து ஆடுகிற சிவ-சக்தி அவதாரம்; பூமியில் வந்த மங்காத வைடூரியம்; ஒருபோதும் சினமறியாக் கருணையே வடிவான, இந்தக் கலியுகத்துக்கான தெய்வம்.

3. முத்து

தெய்வங்கள் அத்தனையும் ஒன்றாய்ச் சேர்ந்தே
உய்விக்க ஓருருவாய் வந்தே நின்ற
மெய்யுருவே மிளிர்முத்தே சத்ய சாயீ
வையகத்தில் வானகத்தைக் கொண்டு வந்தாய்!

பொருள்:
சத்ய சாயீசா! அனைத்துத் தெய்வங்களும் ஒன்று சேர்ந்து ஒரே வடிவில் எம்மை உய்விக்கும் பொருட்டாகப் புவிக்கு வந்த மெய்ஞானப் பொருளே! ஒளிர்கின்ற முத்தே; இந்த பூமிக்கே நீ சொர்க்கத்தைக் கொண்டுவந்துவிட்டாய்.

4. மரகதம்

வரமென்ன பெற்றோம்நாம் வைகுந் தத்தின்
மரகதத்து மாலவனும் மண்ணில் வந்து
கரமுயர்த்தி அபயமென! சத்ய சாயீ
அரவணையில் அறிதுயிலோய்! அன்பர்க் கன்பே!

பொருள்:
சத்ய சாயீசா! வைகுண்ட வாசனாகிய, மரகதப் பச்சை வண்ணம் கொண்ட திருமால் இந்தப் பூவுலகுக்கு வந்து, தனது கையை ‘அஞ்சேல்’ என உயர்த்துவதற்கு நாங்கள் என்ன வரம் பெற்றோமோ! ஆதிசேடன் என்னும் பாம்பணையில் அனைத்தும் அறிந்ததொரு துயிலைக் கொண்டவனே, அன்பர்களுக்கெல்லாம் அன்பாய்ப் பெருகுவோனே.

5. மாணிக்கம்

பேணித்தன் பிள்ளைபோற் காக்கும் அன்னாய்!
மாணிக்கம் போலுடையில் மகிழும் தந்தாய்!
ஆணிப்பொன் போலொளிரும் சத்ய சாயீ,
தோணியென மறுகரையிற் சேர்ப்பாய் நீயே!

பொருள்:
ஸ்ரீ சத்ய சாயீசா! நீ எம்மை அன்னைபோலப் பேணிக் காக்கிறாய். மாணிக்கம் போலச் சிவந்த உடையில் வலம்வரும் தந்தையாகவும் இருக்கிறாய். ஆணிப்பொன் போல ஒளிவீசுகிறாய். பகவானே நீ மறுமைக்கு எம்மை ஒரு தோணியைப் போலக் கொண்டு சேர்ப்பாயாக!

6. பவளம்

சேர்ப்பாய்நீ சேராத இதயம் சேரப் 
பார்ப்பாய்நீ பவளநிற இதழ்ச்சி ரிப்பில்
ஈர்ப்பாய்நீ என்னிறையே சத்ய சாயீ
தேர்ப்பாகா தனஞ்சயனின் உண்மைத் தோழா!

பொருள்:
அர்ஜுனனின் தேர்ப்பாகனாக இருந்தவனே, அவனுடைய உண்மைத் தோழனும் எனது இறைவனுமான சத்ய சாயீ!  சேராத (பகைபூண்ட) இதயங்களையும் ஓர் அருட்பார்வையில் ஒன்று சேர வைத்துவிடுவாய். உன்னுடைய பவளநிற இதழ்களில் உதிர்க்கும் சிரிப்பினால் ஈர்த்துவிடுவாய்.

7. பதுமராகம்

தோழனெனக் கூறிலது நீமட் டுந்தான்
வாழ்க்கையிலும் அப்பாலும் வருவாய் கூட
காழ்பதும ராகக்கல் சத்ய சாயீ
ஏழ்சுரமும் உன்புகழை இசைக்கும் அன்றே!

பொருள்:
ஒளிவீசுகின்ற பதுமராகக் கல் போன்ற சத்ய சாயீ! உண்மையான தோழன் என்று கூறப்போனால் அது நீ மட்டுமே. ஏனெனில், இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமல்லாமல், அதனைத் தாண்டியும் நீ ஒருவனே துணை வருவாய். இசையின் ஏழு சுரங்களும் உன் புகழையல்லவோ இசைக்கின்றன!

8. கோமேதகம்

ஏகாந்த மௌனத்தில் இருக்கும் போது
நீகாந்தக் குரலாலே வார்த்தை சொல்வாய்
ஆகா!கோ மேதகமாகத் தகத கப்பாய்!
மீகாமா! கலங்கரையின் விளக்கம் போல்வாய்!

பொருள்:
(சத்ய சாயீசா!) யாருமில்லாத் தனிமையில் முழு அமைதியில் ஓர் அன்பர் இருந்தால் அவரிடம் நீ உன்னுடைய காந்தம்போல வசீகரிக்கும் குரலால் பேசுவாய்! ஆகா! நீ கோமேதகக் கல்லைப் போல தகதகவென்று தோற்றமளிப்பாய். நீயே எம் வாழ்வாகிய மரக்கலத்துக்கு மாலுமியாகவும், (மாயையாகிய அந்தகாரத்தில்) அதற்குச் சரியாகத் திசைகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் இருக்கின்றாய்!

9. நீலம்

வாயுண்ட ஆலத்தால் தொண்டை நீலம்
மாயன்நீ பலநிறங்கள் காட்டிப் போனாய்
மேயநிறம் கொண்டதெலாம் சத்ய சாயீ
தூயவனே, மதுரகவி சொல்லல் ஆமோ!

பொருள்:
ஆலகால விடத்தை உண்ட காரணத்தால் உனது தொண்டை நீலமானது. ஆனால் மாயனாகிய நீ இந்த அவதாரத்தில் நீலம், பச்சை, மஞ்சள், பொன்னிறம் என்று பலவகை நிறங்களில் மிளிர்ந்ததுண்டு என்றாலும் முற்றிலும் தூயவன் நீ. அப்படியிருக்க நீ மேற்கொண்ட நிறங்களை இந்த மதுரபாரதியாகிய கவிஞன் சொல்ல வல்லவனோ?

10. பலன் குறித்த பாடல் (பலச்ருதி)

ஆமாறு வேண்டுமெனில் ஐயா நின்றன்
தேமாரி நவரத்ன மாலை நித்தம்
பூமாரி போற்சொல்ல இங்கும் அங்கும்
தாமாகத் தேடிவரும் அழியா நன்மை!

பொருள்:
எவருக்கும் ஆக்கம் காணும் உபாயம் வேண்டுமென்றால், தினந்தோறும், தேன்மழை போல இனிக்கும் இந்த நவரத்தின மாலையை, பூச்சொரிந்தது போல ஓதினால், இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் ஆகத்தக்க அழிவற்ற நன்மைகள் தாமாகவே தேடி அவருக்கு வரும்.

Saturday, November 16, 2019

போற்றி பஞ்சகம்!



பாம்பணையும் பாற்கடலும் போதா வென்றோ
பாம்பணையும் புற்றுமிகும் பர்த்தி வந்தாய்!
தேம்பிழியும் திருக்குரலால் தினமும் பேசி
சாம்பலினால் நோய்தீர்க்கும் சாயீ போற்றி!

பனிமலையும் பொற்சபையும் போதா வென்றோ
இனியநதி இழைந்தோடும் பர்த்தி வந்தாய்!
கனியமுதக் கண்விழியில் கருணை தேக்கி
மனிதரிடை அவதரித்த சாயீ போற்றி!

அறுபடையின் திருவீடு போதா வென்றோ
நறுமலர்கள் நனிசூழும் பர்த்தி வந்தாய்!
குறுநகையும் குதிநடையும் கூற்றந் தன்னைச்
செறுவிழியும் சிகையழகும்! சாயீ போற்றி!

அலைமகள்நின் அன்பரவர் இல்லம் சேர்ந்தாள்
மலைமகள்நின் பாதியுடல் ஆகிச் சேர்ந்தாள்
கலைமகள்நின் அன்பரவர் நாவிற் சேர்ந்தாள்
தலைமகனே தனியொருவ சாயீ போற்றி!

காணுவதும் நின்தோற்றம் கணம்வி டாமல்
பூணுவதும் நின்நாமம் நாவில், நெஞ்சில்
பேணுவதும் நின்னருளே, பிறவாப் பேற்றை
வேணுவதும் நின்னிடமே சாயீ போற்றி!

ஓம் ஸ்ரீ சாயிராம்

Thursday, August 8, 2019

சாயீ தாள் பணிவேன்!



நானே எனதே என்றெண்ணி
   நாதா நின்னை மறந்திட்டே
ஊனே வளர்த்தேன் உலகியலில்
   ஊறிக் கிடந்தேன் எனைமீட்டாய்
வானே மண்ணே வையகமே
   வகையாய்ப் படைத்த மாதவனே
தானே தன்னை அறியும்வகை
   தந்தாய் சாயீ தாள்பணிவேன்!

Sunday, June 30, 2019

அச்சமறு பதிகம் - 7


வேட்கைக் கஞ்சுகிலேன் விதநூறு
பூட்கைக் கஞ்சுகிலேன் பொய்ந்நெறியர்
வாட்கைக் கஞ்சுகிலேன் சாயீசன்
தாட்கைக் கணியான தரத்தினாலே!  

பொருள்

சாயீசனின் திருவடிகளே எனது கைகளுக்கு அணியாகிவிட்ட இயல்பினாலே, நான் என்னை அணுகும் ஆசைகளுக்கு அஞ்சமாட்டேன்; (உலகில் நிலவும்) நூறுவிதமான கொள்கைகளுக்கு அஞ்சமாட்டேன்; பொய்யான நெறிகளைப் பின்பற்றுவோரின் ஆயுதம் தாங்கிய கைகளுக்கும் அஞ்சமாட்டேன்.

சிறப்புப்பொருள்

தாட்கைக்கணியான தரம் - தாள் + கைக்கு + அணியான தரம் - என் கைகளுக்கு சாயீசனின் பாதங்களே அணிகலனாக இருக்கும் நிலை, அதாவது, சாயீசன் பாதங்களையே எப்போதும் என் கைகள் பற்றியிருப்பதால் என்பது பொருள்.
பூட்கை - கொள்கை, கோட்பாடு
வாட்கை - வாள் + கை - ஆயுதம் தாங்கிய கை

Friday, June 28, 2019

அச்சமறு பதிகம் - 6


திசைக்கஞ்சேன் தீநரக யமபடர்தம்
கசைக்கஞ்சேன் கண்கவரும் வடிவேய்ந்த
தசைக்கஞ்சேன் தனிக்கருணைச் சாயீசன்
இசைக்கஞ்ச மலரடியில் இசைந்ததாலே!

பொருள்

(இணைகூற முடியாத) தனிப்பெருங் கருணையைப் பொழிகிற ஸ்ரீ சத்திய சாயியின் புகழ்பொருந்திய தாமரை மலர்போன்ற பாதங்களிற் சரணடைந்துவிட்ட காரணத்தினால், (இனி நான்) திசைகளுக்கு அஞ்சமாட்டேன்; தீ கொழுந்துவிட்டு எரிவதாகச் சொல்லப்படும் நரகத்தில், எமபடர்கள் கையில் வைத்திருக்கின்ற சவுக்குக்கு அஞ்சமாட்டேன்; அழகழகான வடிவங்களில் அமைந்த உடல்களின் ஈர்ப்புக்கும் அஞ்சமாட்டேன்.

சிறப்புப் பொருள்

திசைக்கு அஞ்சேன் - வெவ்வேறு திசைகளில் தலைவைத்துப் படுத்தல், திசை நோக்கி உண்ணுதல், சில நாட்களில் சில திசை நோக்கிப் பயணித்தல் என இவ்வாறு பலவற்றுக்கும் தடை உண்டு. ஆனால் எல்லாத் திசைகளிலும் எம் சாயியே நிறைந்திருப்பதைக் காணுவதால் எமக்குத் திசைகளால் ஏற்படும் அச்சமில்லை.

கசைக்கஞ்சேன் - சாயியிடம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்ட எமக்கு இனிப் பாவமும் புண்ணியமும் இல்லாத காரணத்தால் நரக பயமும் கிடையாது.

வடிவேய்ந்த தசை - பால் கவர்ச்சி என்பது அழகாக வடிவமைந்த உடல்களின் கவர்ச்சியே ஆகும். சாயியின்பால் ஈர்க்கப்பட்டுவிட்ட எம் மனம் இனி இனக்கவர்ச்சிக்கு ஆளாகாது.

இசைக்கஞ்ச மலர் - புகழ்பொருந்திய தாமரை மலர்

Thursday, June 27, 2019

அச்சமறு பதிகம் - 5



சாலத்துக் கஞ்சிடேன் சமரஞ்சேன்
ஞாலத்துக் கஞ்சிடேன் நாளஞ்சேன்
கோலத்துக் கொழுஞ்சிகை சாயீசன்
சீலத்துத் திருவடி சேர்ந்ததாலே

பொருள்

அழகாக அமைந்த அடர்ந்த சிகை உடையவனான சாயீசனின் சீலமிக்க திருவடிகளில் தஞ்சமடைந்துவிட்ட காரணத்தினால் நான் (ஏமாற்று வேலை செய்வோரின்) ஜாலங்களுக்கு அஞ்சமாட்டேன், போர்க்களத்துக்கும் அஞ்சமாட்டேன், உலகத்துக்கு அஞ்சமாட்டேன், (அட்டமி நவமி என்பன போன்ற) நாட்களுக்கும் அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற்பொருள்

சாலம் - ஏமாற்று வேலை;
ஞாலம் - உலகம்
கொழுஞ்சிகை - அடர்ந்த தலைமுடி 

Monday, June 24, 2019

அச்சமறு பதிகம் - 4


பனிக்கஞ்சேன் பரிதியின் சூடஞ்சேன்
சனிக்கஞ்சேன் நவகோள் தமக்கஞ்சேன்
தனிக்கஞ்ச மலர்நாட்டச்  சாயீசன்றன்
இனிக்கின்ற எழிற்பாதம் பிடித்ததாலே!

பொருள்

இணையற்ற தாமரைமலர் போன்ற பார்வை கொண்ட சாயீசனின் இனிய, அழகிய பாதங்களைப் பற்றிக்கொண்ட காரணத்தினால், பனிவிழும் குளிருக்கோ, கதிரின் வெம்மைக்கோ அஞ்சமாட்டேன். சனி உட்பட்ட நவக்கிரகங்களின் பார்வைக்கும் அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற்பொருள்

தனிக் கஞ்ச மலர் -> ஒப்பற்ற தாமரைப்பூ
நாட்டம் -> பார்வை

Friday, June 21, 2019

அச்சமறு பதிகம் - 3


கலிக்கஞ்சேன் காலனுக் கஞ்சுகிலேன்
புலிக்கஞ்சேன் பொல்லார்க்கு மஞ்சுகிலேன்
சிலிர்க்கின்ற செழுங்கேசச் சாயீசன்
பிலிற்றுந்தேன் மலர்ப்பாதம் பிடித்ததாலே!

பொருள்
சிலிர்த்து நிற்கும் செழுமையான கேசத்தைக் கொண்ட சாயீசனின் தேன் ததும்பும் மலர்போன்ற பாதங்களைப் பற்றிக்கொண்ட காரணத்தால், நான் இனி கலிபுருஷனுக்கு அஞ்சமாட்டேன், எமனுக்கும் அஞ்சமாட்டேன், புலிக்கு (அதுபோன்ற கொடிய மிருகங்களுக்கு) அஞ்சமாட்டேன், பொல்லாத மனிதர்களுக்கும் அஞ்சமாட்டேன். 

Thursday, June 20, 2019

அச்சமறு பதிகம் - 2


பார்க்கஞ்சேன் வளிதீ வானமினும்
நீர்க்கஞ்சேன் நெஞ்சநிறை ஆசைகளின்
போர்க்கஞ்சேன் புகலிடமாய்ச் சாயீசன்
சீர்க்கஞ்ச மலர்ப்பாதம் சேர்ந்ததாலே!

பொருள்
சாயீசனின் அழகிய தாமரைப் பாதங்களே தஞ்சமென அடைந்துவிட்ட காரணத்தால்,  பஞ்சபூதங்களாகிய நிலம், தீ, நீர், காற்று, வானம் என்ற எவற்றுக்கும் அஞ்சமாட்டேன். மனதில் நிறைந்து போராடுகின்ற ஆசைகளுக்கும் (அவற்றை என்னால் வெற்றிகொள்ள முடியும் என்ற காரணத்தால்) அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற்பொருள்
வானமினும் -> வானம் + இ(ன்)ன்னும், வானம் மற்றும்
சீர்க்கஞ்ச மலர் -> சீர் + கஞ்ச மலர் ->அழகிய தாமரைமலர் 

Wednesday, June 19, 2019

அச்சமறு பதிகம் - 1



நோய்க்கஞ்சேன் நொடித்துப் பழிபேசும்
வாய்க்கஞ்சேன் நள்ளிரவில் நட்டமிடும்
பேய்க்கஞ்சேன் அஞ்சலென் றுரைசாயி
வாய்க்கஞ்ச மலர்கண்ட பரிசினாலே!

பொருள்
சாயீசன் தனது தாமரை வாயினைத் திறந்து “அஞ்சாதே” என்றெமக்குக் கூறிய விதத்தினால் தைரியம் கொண்டுவிட்ட நான் இனி நோய்களுக்கு அஞ்சமாட்டேன், என்னைக் குறித்து முகத்தை நொடித்தபடி பழி பேசுகிற ஊராரின் வாய்க்கும் அஞ்சமாட்டேன், நடு இரவினில் தலைவிரித்து ஆடுவதாகக் கூறப்படும் பேயே வந்தாலும் இனி அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற் பொருள்
வாய்க்கஞ்ச மலர் - வாய் + கஞ்சமலர் -> வாயாகிய தாமரைப்பூ
பரிசினாலே -> விதத்தினால், தன்மையினால்

மதுரபாரதி

Sunday, May 5, 2019

ஈசுவாராம்பா திருமகன்


                         ஈசுவராம்பா திருமகன் தன்மலர்
                              இதழ்கள் மலர்ந்து
                         பேசுவதெல்லாம் வேதம் மனதில்
                               பிணைப்பது பிரேமை
                         வீசுவன் சூரியஜோதி விண்ணோர்
                               வேந்தர்தம் வேந்தன்
                         மாசறு தெய்வதம் இவனை
                                மகிழ்வொடு தொழுவோம்!

Tuesday, April 2, 2019

சாயி - அட்சய பாத்திரம், காமதேனு, கற்பக விருட்சம்


அள்ள அள்ளக் குறையாத
  அட்சய பாத்திரம் திரௌபதிக்கு
வள்ளல் காம தேனுவெனும்
  மந்திரப் பசுவாம் வசிஷ்டனுக்கு
கிள்ளப் பலவகைக் கனிதந்த
  கற்பக மரமோ பர்த்தியிலே
உள்ளத் துள்ளே என்சாயி
  அட்சயம், கற்பகம், காமதேனு!

Monday, March 4, 2019

புகலிடம் எனக்கேதையா!



பல்லவி

புகலிடம் எனக்கேதையா - நின்னை விட்டால்
புட்டபர்த்தீசா த்ரிபுவனேசா                    (புகலிடம்..)

அனுபல்லவி

அகலிகை சாபம் அகற்றிய பாதத்
துகளென் சிரந்தனைத் தீண்டிடுமோ ஐயா!  (புகலிடம்)

சரணங்கள்

அன்றொரு வேடன் மராமரம் என்றான்
மற்றொரு வேடன் கண் பிடுங்கி நட்டான்
தின்று பார்த்த பழந் தனையொரு கிழவி தந்தாள்
என்றன் பக்தி பாபா இவற்றினும் குறைவோ?  (புகலிடம்)

பிரம்படி என்னால் விழுந்ததுண்டோ உனக்கு
பரம்பரைச் சொத்தில் பங்குதனை வாங்கித்
தரும்படித் தூது நடக்க வைத்ததுண்டோ
தாள் பணிகின்றேன் தாய் தந்தை போல்வாய்  (புகலிடம்)

எத்தனை யுகங்கள், எத்தனை பிறவி!
அத்தனையிலும் என் உடன் நடந்திட்டாய்!
பித்தனிம் மதுரன் பிதற்றலைக் கேட்டு
முத்தி தராமல் போய்விடுவாயோ       (புகலிடம்)

Thursday, January 17, 2019

ஸ்ரீ சத்திய சாயி தாலாட்டு



நெஞ்சத்துத் தொட்டிலிலே நினைவென்னும் பட்டுதனை
மஞ்சமாய் விரித்து, பக்தி மணம் தெளித்து
அஞ்சுகமே, ஆரமுதே துயில்கொள்ள அழைக்கின்றோம்
பிஞ்சுக் கதிரவனே தாலேலோ!
பெரியவற்றில் பெரியவனே தாலேலோ!

அர்த்த ராத்திரியில் மத்தளமும் தம்பூரும்
சத்தம் எழுப்பிக் கூறினவாம் நின்வரவை
பர்த்தியின் வரமே பாருக்குப் பேரொளியே
உத்தமனே சத்தியமே தாலேலோ!
உன்னதனே மன்னவனே தாலேலோ!

சொர்ணமகள் ஈஸ்வரம்மா கருவில் உதித்தவனே
கர்ணம் சுப்பம்மா கைகளிலே வளர்ந்தவனே
வர்ணக் களஞ்சியமே வானவில்லே மாயவனே
தர்மத்தின் நாயகனே தாலேலோ!
தாய்க்கெல்லாம் தாயானாய் தாலேலோ!

அரங்கமா நகரிலே அறிதுயில் கொண்டதனால்
இரவிலும் பகலிலும் உழைத்தாயோ பர்த்தியிலே
புரந்தரா நிரந்தரா பொதுநடம் புரிந்தவா
வரம்பிலாக் கருணையாய் தாலேலோ
வள்ளலே கண்வளர்வாய் தாலேலோ

அன்பென்னும் வில்லிலே அன்புச் சரம்பூட்டி
அன்பெய்தாய் அவனிதனை அன்பாலே ஆட்கொண்டாய்
அன்பின் சுரங்கமே அன்பென்னும் பெருங்கடலே
அன்பருக் கன்பனே தாலேலோ!
அன்பு வடிவானவா தாலேலோ!

Thursday, January 10, 2019

மேம்போக்கான விடைகளும் அனுபவத்தின் குரலும்



ஒரு நேர்காணலின் போது சுவாமி, “கடவுள் எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். பல சகோதரர்கள் பதில் கூறினர். ஒருவர் “சுவாமி கடவுள் எனக்குள் இருக்கிறார்” என்று கூறினார். “ஓ அப்படியா? அப்படியானால் நீ ஏன் புட்டபர்த்திக்கு வருகிறாய்? எதற்காகச் சுவாமியைப் பார்க்க வருகிறாய்?” என்று சுவாமி சீண்டினார். சகோதரரால் பதில் சொல்ல முடியவில்லை. சுவாமி “பங்காரு, உன்னிடம் எண்ணம், சொல், செயல் இவற்றின் ஒருமைப்பாடு இருக்கவேண்டும். உனக்குள் சுவாமி இருக்கிறார் என்பதோடு அதை நீ உணரவும் வேண்டும். அந்த அனுபவத்துக்குப் பின்னால்தான் நீ அப்படிக் கூறமுடியும். இல்லையென்றால் அது போலி நடிப்புதான்” என்று கூறினார்.

அனுபவத்தின் குரலில்தான் நாம் பேசவேண்டும் என்பதை நாங்கள் அதிலிருந்து புரிந்துகொண்டோம். இல்லையென்றால் அது பாசாங்கு. சுவாமி கூறுவதன் உட்பொருளைப் புரிந்துகொள்ள (அந்தப் பொருளின் அனுபவமே சுவாமிதான்) அவரது போதனைகளை நாம் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். நாம், குறிப்பாக இளைஞர்கள், வெளிநோக்கிய போக்குக் கொண்டிருப்பதால், நாம் செயல்படுவதை - புறச்செயல்பாட்டை = நோக்கியே சாய்கிறோம். பகவானின் போதனைகளை மையமாகக் கொண்டு, அதையே ஆழ்ந்து சிந்தித்து, அதைச் (சிரமப்பட்டாவது) செயலில் கொண்டுவருவதுதான் சாதனைப் பாதை ஆகும். அந்தப் பாதையில்தான் சுவாமி நாம் நடக்கவேண்டும் என விரும்புகிறார்.

பகவான்! எங்கள் திசையை மாற்றியமைக்கு நன்றி. இவற்றைப் பின்பற்றுவதற்கான பலத்தை நீங்கள்தான் கொடுக்கவேண்டும். இந்தப் படிப்பினைகளைப் பின்பற்ற எங்களுக்கு ஆற்றல், அறிவு, விழிப்புணர்வு ஆகியவற்றைத் தாருங்கள். நன்றி, ஜெய் சாய்ராம்.

நன்றி: சனாதன சாரதி, டிசம்பர் 2018

சாயீஸ்வரா நீயே துணை!



பல்லவி

சாயீஸ்வரா நீயே துணை!

அனுபல்லவி

தாய் ஆயிரம் பேராயினும்
நேயா நினக் கீடாவரோ!  (சாயீஸ்வரா)

சரணங்கள்

இளமைதனில் கருவம்மிக, வழிமாறினோம் தடுமாறினோம்
அளவில்பெருங் கருணையுடன் ஐயன்வர மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

வாய் பேசினோம் வசை வீசினோம் இறைநாமமே சொலக் கூசினோம்
தேயா மதி திகழும் முகத் தெய்வம் உன்னால் மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

இன்பம் பெறும் இச்சைகளால் நற்பண்பினை விலைபேசினோம்
இன்பம் எனில் இறைவன் என அறிவூட்டினை மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

உலகம் ஒரு குடும்பம் அதில் உறையும் அனைத் துயிரும் இனி
விலகா உற வெனநெஞ்சிலே உணர்வூட்டினை மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

இதயம் ஒரு கோவில் அதில் அன்பென்பதே கடவுள் எனச்
சதமும்பொதுப் பணிசெய்திட விதிசெய்தனை மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

நாமங்களும் ரூபங்களும் நாம்செய்தவை, நம்நெஞ்சிலே
காமம்விடக் காட்சிப்படும் கடவுள் என்றாய் மனம் மாறினோம்!  (சாயீஸ்வரா)

பர்த்தீஸ்வரா பரமேஸ்வரா அகிலேஸ்வரா ஹ்ருதயேஸ்வரா
முத்தி தரும் பூர்ணேஸ்வரா உன்பாதமே சரணாகதி  (சாயீஸ்வரா)

Tuesday, January 8, 2019

ஸ்ரீ சத்ய சாயி கிளிக்கண்ணி



பர்த்தி புரீசனடி பிரசாந்தி வாசனடி
பக்தர்தம் நேசனடி - கிளியே 
பாப விநாசனடி.

சொன்ன சொல் எல்லாம் வேதம், வாய் திறந்தாலே கீதம்
பார்வையில் கிட்டும் போதம் - கிளியே 
பவவினை ஓடும் காதம்  (பர்த்தி)

அன்னமென நடந்தான் அன்பெனும் அமுதம் தந்தான்
மன்னவன் பதம் பற்றினால் - கிளியே 
மட்டிலா ஆனந்தந்தான்  (பர்த்தி)

தேடாததெல்லாம் தேடி ஆசைகள் பின்னே ஓடி
அலுத்தபின் அண்ணல் வந்தான் - கிளியே 
அமைதியைத் தந்தானடி  (பர்த்தி)

மிருககுணம் தவிர்த்து மனிதராய்ப் பரிணமித்து
வாழ வழிகாட்டினான் - கிளியே 
வணங்கிடு கை குவித்து!  (பர்த்தி)

மானவ சேவை ஒன்றே மாதவ சேவை என்றே
கோனவன் நெறி காட்டினான் - கிளியே 
கொடுப்பினை செய்தோம் நன்றே!  (பர்த்தி)

எல்லோரும் என் குடும்பம் என்றபின் ஏது துன்பம்
வல்லானின் பாதம் பற்றி - கிளியே 
வாழுதல் புவியில் இன்பம்  (பர்த்தி)

விதுரனின் கூழ்குடித்தான், பொற்சபையில் நடித்தான்
சதுரனெம் சாயிவந்தான் - கிளியே
கலியதன் கதை முடித்தான்!  (பர்த்தி)

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தமே - கிளியே 
ஐயன் பாதாரவிந்தமே!   (பர்த்தி)

Thursday, January 3, 2019

ஸ்ரீ சத்ய சாயி கும்மிப் பாட்டு


தட்டுங்கடி கையைக் கொட்டுங்கடி சத்ய
  சாயி பெயர் சொல்லித் தட்டுங்கடி
பட்டொளி அங்கி அணிந்தவன் பொன்மலர்ப்
  பாதத்தைச் சிந்தையில் கட்டுங்கடி!

வேதத்தின் உச்சியில் வீற்றிருப்பான் ஏழை
  வேடனின் கண்ணையும் ஏற்றிருப்பான்
நாதத்திலும் ஞான போதத்திலும் உள்ள
  நாதனின் பேர்சொல்லிக் கும்மியடி!

பர்த்தியெனும் சிறு பட்டியில் தோன்றியே
  பாரெங்கும் பக்தர் மனங்களிலே
நர்த்தனம் செய்திடும் ஆடலரசனின்
  நாமத்தைச் சொல்லியே கும்மியடி!

கண்ணன்சிவன் கந்தன் கணபதி கோசலை
  கர்ப்பத்தில் தோன்றிய ராமனிவன்
எண்ணரிய தெய்வம் அத்தனையும் இவன்
  என்று புகழ்ந்து கை கொட்டுங்கடி!

தங்கத்தில் கைவளை மின்னிடவும் தலை
  தாங்கிய பூச்சரம் முன்னிடவும்
அங்கம் வியர்த்து மினுங்கிடவும் ஐயன்
  அழகை வியந்து கை கொட்டுங்கடி!

சேவை செய்வோரை நயந்திடுவான் சுரம்
  சேர்த்திசை பாடிடில் காத்திடுவான்
ஓவோ இவனைப்போல் இன்னோர் தெய்வம் இனி
  உண்டோ எனப் பாடிக் கும்மியடி!

சத்தியம் தருமம் பிரேமை என இவன்
  சாந்திக்குப் பாதை அமைத்துத் தந்தான்
முத்தியும் உண்டாம் இப்பாதையில் போயிடின்
  மோகனனைப் பாடிக் கும்மியடி!

கருமம் பக்தி ஞானம் யாவுமே
  கற்றுக்கொடுத்தான் எளியருக்கும்;
கருமுகில் சிகையெனக் கொண்ட சதாசிவன்
  கருணையை எண்ணியே கும்மியடி!

அனைத்து லகிலும் அனைத்து யிர்களும்
  ஆனந்த மாகவே வாழ்கவென
நினைக்கப் பயிற்சி கொடுத்தவனின் பெரும்
  நேயத்தைப் போற்றியே கும்மியடி!

ஈசுவ ராம்பாவின் வயிறுதித்த சா
  யீசனின் சுந்தர ரூபத்தினை
மாசிலா மனதொடு எண்ணியெண்ணி
  மகிழ்ந்து சுழன்று நீ கும்மியடி!

உலகம் அன்பில் தழைத்திடவும் மக்கள்
  ஒற்றுமையில் உயர் வடைந்திடவும்
அலகிலாத் தெய்வம் அருளிடவும் வேண்டி
  ஆடியே கும்மி அடியுங்கடி!

சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம்
  சாயிராம் சாயிராம் சாயிராமா
சாயிராம் சாயிராம் சாயிராமா எனச்
  சாயிநாமம் பாடிக் கும்மியடி!