இருபது வருடங்களுக்கு முன்னால் ஒருவர் என்னிடம் வந்து, பரிட்சையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற ஆசிர்வதிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். நீ முயற்சி எடுக்கவேண்டும், கடவுள் சங்கல்பத்தின்படி முடிவு இருக்கும் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் முதல்வகுப்பில் மிக அதிக மார்க்குடன் தேர்ச்சிபெற்றார். அவர் மறுபடியும் என்னிடம் வந்து ஒரு வேலை கிடைக்க ஆசிர்வாதம் கேட்டார். ஒரு மாதத்தில் வேலை கிடைத்தது.
சில மாதங்களுக்குப் பின் என்னிடம் வந்து, “எனக்கு வேலை கிடைத்துவிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் அலுவலகத்தில் என்னோடு வேலை பார்க்கும் டைப்பிஸ்டை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றார். உனது பெற்றோருக்குச் சம்மதமானால் நீ அவளை மணந்துகொள், ஆனால் உன் பெற்றோர் சம்மதிப்பது கடினம் என்றேன். நான் சொன்னதைக் கேட்க அவர் தயாராக இல்லை. என் பெற்றோர் சொல்லை மீறி நான் அவளை மணக்கத் தயாராக இருக்கிறேன். ஒருவேளை அவளை நான் மணக்கமுடியாமல் போனால் என் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன் என்றார் அவர். உன் பெற்றோரின் சம்மதத்தை நீ பெற்றாக வேண்டும் என்றேன் நான். அவரது பெற்றோரை மிகுந்த கட்டாயத்துக்கு உள்ளாக்கவே, வேறு வழியில்லாமல் அவர்கள் சம்மதித்தனர்.
திருமணம் ஆனது. ஓராண்டுக்குப் பிறகு இருவரும் என்னைப் பார்க்க வந்தனர். தமக்கு ஒரு மகன் வேண்டும் என்று கேட்டனர். மகன் பிறந்ததும் செலவினம் அதிகரித்தது. அவருடைய மனைவி வேலையை விட்டுவிட்டார். தனக்குப் பதவி உயர்வு வேண்டுமென்று கோரி மீண்டும் அவர் என்னிடம் வந்தார். உலக விஷயங்களில் அவர் சற்றே அசடுதான் என்றாலும் சுவாமியின்மீது அளவுகடந்த பக்தி வைத்திருந்தார். நான் அவரை ஆசிர்வதித்தேன், அவருக்குப் பதவி உயர்வும் கிடைத்தது.
அதன்பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் அவர் வரவில்லை. அந்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. பின்னர் மீண்டும் என்னிடம் வந்தார். “சுவாமி எனக்குக் குடும்பவாழ்க்கை அலுத்துப் போய்விட்டது. எனால் அந்த பாரத்தைச் சுமக்கமுடியவில்லை. அதிலிருந்து வெளியேவர விரும்புகிறேன். எனக்கு இங்கேயே ஆச்ரமத்தில் ஒரு சிறிய வேலை கொடுங்கள். என் குடும்பம் என்மீது ஒரு சர்ப்பத்தைப் போல இறுகச் சுற்றிக்கொண்டிருக்கிறது” என்றார் அவர்.
“சர்ப்பம் தானே வந்து உன்னைச் சுற்றிக்கொண்டதா? இல்லை, உன்னைச் சுற்றிக்கொள்ள அதை நீ அனுமதித்தாயா?” என்று கேட்டேன் நான்.
- பாபா (சனாதன சாரதி, ஜூலை 2015)